
மதுரை நகரில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும் ஒரு கோவில் இருக்கிறது என்பது பலருக்கு தெரியாது. அது தான் மதுரை பாதாள குபேர பைரவர் கோவில். அதன் சிறப்பு குறித்து பார்க்கலாம்.
கோவில் நகரம் என்று மதுரையை சொல்வதற்கு காரணம் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பழமையான கோவில்கள் அதிகமாக இருப்பது தான். அதிலும் மதுரைக்கு அடையாளமாக இருக்கக்கூடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பலவிதமான சுவாரசியமான பல சுவாமிகள் இருக்கின்றன.
அப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய சுவாரசியமான கோவில்களில் ஒன்றுதான் பாதாள குபேரபைரவர் கோவில். வடக்கு சித்திரை வீதி மற்றும் மேல சித்திரை வீதி சந்திப்பில் இருக்கக்கூடிய இந்த கோவிலுக்கு பாதாள குபேர பைரவர் என்று பெயருக்கு காரணம் என்னவென்றால் இங்கு இருக்கக்கூடிய பைரவர் பாதாளத்தில் இருப்பது போல் காட்சி அளிப்பார்.
அதாவது வெளியே இருந்து பார்க்கும் பொழுது உள்ளே பைரவர் இருப்பது தெரியாது அந்த அளவிற்கு பாதாளத்தில் இருப்பார்.
குறிப்பாக இந்த கோவிலின் சன்னதி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும். அதாவது தினமும் வரக்கூடிய ராகு காலத்தில் மட்டுமே கோவிலின் சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது சிறப்பாகும். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இந்த கோவில் ராகு காலத்தில் மட்டுமே திறக்கப்பட்டு வந்ததால் தற்போதும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த பாதாள குபேர பைரவரை வழிபடுவதன் மூலமாக செல்வ செழிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தீர வழி வகுக்கக் கூடியவையாகவும், திருமண தடை, குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்படுகின்றது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்லாது, தடைகள், சிக்கல்கள், பில்லி, சூனியம் என அனைத்தையும் விரட்டி அடிக்கிறார்.
ராகு காலத்தில் மட்டும் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படும் இந்த குபேர பைரவர் சக்தி வாய்ந்த பைரவராக இருப்பதினால் மதுரை மக்கள் அனைவருமே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தால் இக்கோவிலுக்கு வந்து குபேர பைரவரை தரிசனம் செய்யாமல் செல்ல மாட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது.
இப்படிபட்ட குபேர பாதாள பைரவரை வேறு எந்த கோவிலிலும் காணமுடியாது. இந்த கோவிலில் ராகு காலத்தில் நடை திறக்கப்பட்டு இராகு காலம் முடியும் நேரத்தில் நடை சாத்தப்படும். வாரத்தில் ஒவ்வொரு நாளும் வரும் இராகு காலத்தில் மட்டுமே இந்த பைரவருக்கு பூஜைகள் நடைபெறும். அதன் படி
திங்கள் 7.30 முதல் 9 மணி வரை,
செவ்வாய் 3 முதல் 4.30 மணி வரை,
புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை,
வியாழன் 1.30 மணி முதல் 3.00 மணி வரை,
வெள்ளிக்கிழமை 10.30 முதல் 12 மணி வரை,
சனிக்கிழமை 9 முதல் 10.30 மணி வரை,
ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை.
பக்தர்களின் வேண்டுதலுக்கு உடனே செவிசாய்த்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார். பூர்வ ஜென்ம பலன் இருப்பவரால் மட்டுமே இந்த பைரவரை தரிசிக்க முடியும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றால் மறக்காமல் இவரையும் தரிசித்து பலனடையுங்கள்!