புண்ணியத் தீர்த்த நீரில் நீராட்டி முக்தி கொடுத்த மகாபெரியவர்!

புண்ணியத் தீர்த்த நீரில் நீராட்டி முக்தி கொடுத்த மகாபெரியவர்!

காஞ்சி மகாபெரியவர் ஒரு சமயம் திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்தார். யாத்திரைக்கு நடுவே வழுவத்தூர் என்ற கிராமத்தில் அவர் தமது பக்தர் ராமசுவாமி என்பவரின் வீட்டில் தங்கி இருந்தார். அப்படித் தங்கியிருந்தபோது, ஒரு நாள் மாலை ராமசுவாமியை அழைத்த மகாபெரியவர், ‘‘பசு கொட்டகையில் இருக்கும் ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் நிரப்பி, அதில் இரண்டு கைப்பிடி கல் உப்பைப் போட்டு கொண்டு வா!” என்றார்.

மகாபெரியவர் கூறியபடியே ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி, உப்புப் போட்டு எடுத்து வந்தார் ராமசுவாமி. சற்று உயரமான திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, தமது இரு கால்களையும் அந்த உப்புத் தண்ணீருக்குள் வைத்துக் கொண்டார் மகாபெரியவர். அவர் அப்படிச் செய்தது அனைவருக்கும் புதுமையாக இருக்கவே, பலரும் அங்கே கூடிவிட்டார்கள்.

‘‘இன்றைக்கு ரொம்ப நேரம் ஒரேமாதிரி அசையாம உட்கார்ந்திருந்தேனா... அதுல கால் இறுகிக்கொண்டு வலிக்கிறது. அதுக்குத்தான்!” என யாரும் கேட்காமலே காரணம் சொன்னார் மகாபெரியவர். சற்று நேரம் கழித்து மகா பெரியவர், அந்தப் பாத்திரத்தில் இருந்து தமது திருவடிகளை எடுத்ததுதான் தாமதம்... அதற்காகவே காத்திருந்தது போல எல்லோரும் அவரை நெருங்கி, அந்த நீரை தீர்த்தமாக பாவித்து தங்கள் தலையில் தெளித்துக் கொண்டார்கள். அதைக் கண்ட மகாபெரியவர், ‘‘அந்த ஜலத்தை முழுசா தீர்த்துடாதீங்கோ. ஒரு செம்புல கொஞ்சம் நிறைச்சு வையுங்கோ!” எனக் கூற, அனைவர் மனதிலும் ‘ஏன்?’ என்ற கேள்வி எழுந்தது. இருந்தாலும் பெரியவா சொன்னபடி, ஒரு செம்பில் அந்த உப்பு நீரை எடுத்து வைத்தார்கள்.

அன்று பொழுது சாயும் நேரம். வயதான பாட்டி ஒருவர் மகாபெரியவர் முன் வந்து நின்று எதுவும் பேசாமல், அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பாட்டியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மகாபெரியவர், ‘‘என்ன... காசி, ராமேஸ்வரம் போக வேண்டும் என்று ஆசை. ஆனால், கையில் காசு இல்லையே! என்ற ஏக்கத்தோடு என்னிடம் வந்திருக்கிறாயோ!” எனக் கேட்டார்.

‘‘ஆமாம் பெரியவா!” தழுதழுப்புக்கு இடையே இந்த இரட்டை வார்த்தைகளை மட்டும் உதிர்த்தார் அந்த மூதாட்டி.

அதையடுத்து உள்புறம் திரும்பி, ‘‘ராமசுவாமி, அந்த செம்புல நிரப்பி வைத்த ஜலத்தை எடுத்துக் கொண்டு வா!” என்று குரல் கொடுத்தார் மகாபெரியவர். மறு நிமிடம் செம்பு நீரை எடுத்துக்கொண்டு அவர் வர, ‘‘அதை அப்படியே அந்தப் பாட்டி தலையில் ஊற்று...!” என்றார்.

மகாபெரியவா கட்டளைப்படி அதை அப்படியே நிறைவேற்றினார் அந்தத் தொண்டர். அடுத்து, தமது கையில் இருந்த கமண்டல நீரை காலியான செம்பில் ஊற்றிய பெரியவர், அதையும் அந்தப் பாட்டி தலையில் ஊற்றச் சொன்னார்.

‘‘முதல்ல ராமேஸ்வரம், அடுத்தது காசி. ரெண்டு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடின பலன் உனக்குக் கிடைச்சாச்சு. கவலைப்படாமல் போ. எல்லாம் நல்லபடியாக நடக்கும்!” எனக் கூறி, கை உயர்த்தி ஆசிர்வதித்தார். மனம் முழுக்க பரிபூரண திருப்தியுடன் புறப்பட்டார் அந்த மூதாட்டி.

இதுவரை நடந்ததெல்லாம் அனைவருக்கும் சாதாரணமாகவே தோன்றியது, ஓரிரு நாட்களுக்குப் பிறகு அந்தத் தகவல் வரும் வரை. அந்தச் செய்தி, மகாபெரியவரின் திருவிளையாடலை உணர்த்தியது அனைவருக்கும். மகாபெரியவரை தரிசித்துவிட்டுப்போன அந்த மூதாட்டி, அதற்கு மறுநாளே முக்தி அடைந்திருந்தார். விஷயத்தை மெதுவாக மகாபெரியவரிடம் தெரிவித்தார் அணுக்கத் தொண்டர் ராமசுவாமி.

கொஞ்சமும் பதற்றமில்லாமல் அதைக் கேட்டுக்கொண்ட மகாபெரியவர், ‘‘அதனாலதான், நேத்திக்கே உன்னை அவளுக்குப் புண்ணிய தீர்த்த ஸ்நானம் பண்ணிவைக்கச் சொன்னேன்! கஷ்டமே இல்லாம முக்தி கிடைச்சிருக்கு அவளுக்கு!” என்று சொல்ல, திடுக்கிட்டுப் போனார் ராமசுவாமி.

தன்னை தரிசிக்க வந்திருக்கும் மூதாட்டிக்கு காசி, ராமேஸ்வர புண்ணியத் தீர்த்தத்தில் நீராடும் ஆசை இருப்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, உப்பு நீரை (ராமேஸ்வரம் கடல் நீர்) எடுத்துவைக்கச் சொன்னதும், தமது கமண்டல தீர்த்தத்தையும் (சன்யாசிகளின் கமண்டல நீரில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம்) அந்த மூதாட்டி மேல் அபிஷேகிக்கச் சொன்னதும் ஆச்சரியம் என்றால், அவளது முக்தியை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, தாமதிக்காமல் அவளது ஆசையைப் பூர்த்தி செய்து, புண்ணியம் தேடித் தந்தது காஞ்சி மகா பெரியவரின் எத்தனை பெரிய திருவிளையாடல்?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com