25 தலைகள், 50 கைகள்! நீங்கள் அறிந்திராத சிவபெருமானின் பிரம்மாண்ட 'மகா சதாசிவ மூர்த்தி' வடிவம்!

Maha Sadashiva Murti - மகா சதாசிவ மூர்த்தி
Maha Sadashiva Murti - மகா சதாசிவ மூர்த்திAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சிவபெருமான் என்றாலே நம் நினைவுக்கு உடனே வருவது அவரது நெற்றிக்கண்ணும், கையில் இருக்கும் திரிசூலமும்தான். ஆனால் சிவபெருமானின் வடிவங்கள் எண்ணற்றவை. அவற்றில் மிகப் பிரம்மாண்டமான ஒரு வடிவம் உண்டென்றால் அது மகா சதாசிவ மூர்த்தி என்றொரு வடிவம்தான்.

மகா சதாசிவர் என்பவர் சிவபெருமானின் 64 மகேஸ்வர மூத்தங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் பிரம்மாண்டமான ஒரு கோலமாகும். இவர் 25 தலைகள் 75 கண்கள் மற்றும் 50 கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இந்த விஸ்வரூப வடிவத்தின் தத்துவார்த்த அர்த்தங்கள் நிறைய உள்ளன. புராணங்களின் படி இவர் கைலாயத்தில் அமர்ந்து கொண்டு அகில உலகத்தையும், அனைத்து உயிர்களையும் காத்து அருள்புரிபவர்.

மகா சதாசிவர் விஸ்வரூப வடிவம் எடுத்து வீற்றிருக்கும் திருத்தலங்கள்: 

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்: 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தாணுமாலயன் கோவிலில் 25 கைகள் மற்றும் 50 கரங்களுடன் கூடிய மகா சதாசிவரின் அற்புதமான வடிவம் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலமாகும்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சொக்கநாதபுரம்: 

சிவகங்கை மாவட்டம், கல்லல்-மேலூர் சாலையில் உள்ள சொக்கநாதபுரத்திலும் மகா சதாசிவரின் விஸ்வரூப சிற்பம் அமைந்துள்ளது. திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள சிற்பக்கூடத்தில் 4 டன் எடையில், கருங்கல்லால் நுணுக்கமாக செதுக்கப்பட்ட 25 தலை, 50 கைகள் கொண்ட மகா சதாசிவ மூர்த்தி சிலை இக்கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 7.5 அடி உயரமுள்ள மகா சதாசிவ மூர்த்தி சிலை சமீப காலங்களில் உருவாக்கப்பட்டு மக்களின் வழிபாட்டிற்கு வந்துள்ளது.

Maha Sadashiva Murti - மகா சதாசிவ மூர்த்தி
Maha Sadashiva Murti - மகா சதாசிவ மூர்த்திAI Image

காஞ்சிபுரம் சுரகரேஸ்வரர் கோவில்:

இக்கோவிலின் விமானத்தில் மகா சதாசிவரின் நுணுக்கமான சுதை சிற்பத்தைக் காணமுடியும். பல்லவர் காலக் கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாக விளங்கும் இக்கோவிலில் மகா சதாசிவ மூர்த்தியை கோபுரத்தில் கண்டு வணங்கலாம். இதுபோல் பல பழமையான சிவாலயங்களின் விமானங்களிலும், கோபுரங்களிலும் மகா சதாசிவ மூர்த்தியின் சிற்பங்கள் அமையப் பெற்றிருக்கும்.

தஞ்சாவூர் திருநல்லூர்: 

இங்குள்ள சிவன் கோவிலின் ராஜகோபுரத்தில் மகா சதாசிவ மூர்த்தியின் விஸ்வரூப தரிசனம் இடம்பெற்றுள்ளது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் ஆலயம் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் கோபுரங்களிலும் மகா சதாசிவ மூர்த்தியின் சுதை வடிவங்களை தரிசிக்க முடியும்.

25 தலைகளின் தத்துவம்: 

சிவனின் ஐந்து முக்கிய முகங்களான சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம் மற்றும் ஈசானம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 முகங்களாகப் பிரிந்து மொத்தம் 25 தலைகளாகக் காட்சி தருகின்றன. இந்த 25 தலைகளும் சிவனின் ஐந்து தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் ஆகிய ஒவ்வொரு தொழிலுக்கும் உள்ள 5 உட்பிரிவுகளைக் குறிக்கின்றன. இவரை புராணங்கள் 'அனுக்கிரக மூர்த்தி' அதாவது அருளை வழங்குபவர் என்று போற்றுகின்றன.

இதையும் படியுங்கள்:
கடலில் கிடைத்த பாறை... உத்திரகோசமங்கை மரகத நடராஜர் உருவான மர்ம வரலாறு!
Maha Sadashiva Murti - மகா சதாசிவ மூர்த்தி

50 கரங்களின் தத்துவம்: 

இவரது 50 கரங்களும் தமிழ் அகர வரிசையில் உள்ள 50 எழுத்துக்களைக் குறிப்பதாக ஐதீகம். அதாவது உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, ஆயுத எழுத்து 1, உயிர்மெய் எழுத்துக்கள் என சமஸ்கிருத மற்றும் தமிழ் மொழியின் 50 அடிப்படை ஒலிகளை (அட்சரங்கள்) தனது 50 கைகளில் தாங்கி படைப்புக்கெல்லாம் மூலமாக விளங்கும் நாத பிரம்மமாக  மகா சதாசிவர் திகழ்கிறார்.

வழிபாட்டு சிறப்பு: 

சைவ சித்தாந்தத்தின்படி மகா சதாசிவர் அனைத்து கலைகளுக்கும் வித்தைகளுக்கும் மூலாதாரமாக விளங்குபவர். இவரை தரிசித்து வழிபட்டால், சிவபெருமானின் முழுமையான திருவருளும், விரைவில் சிவ தரிசனமும் கிட்டும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்.

இவரை வழிபடுவதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். நோய்கள் தீரும். நீண்ட நாட்கள் குணமாகாத காய்ச்சல் இருந்தால் இந்த மகா சதாசிவ மூர்த்தியை மனதார நினைத்து அவருக்கு கரும்புச்சாற்றால் அபிஷேகம் செய்வதாக வேண்டிக்கொள்ள காய்ச்சல் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவரைத் தொடர்ந்து தியானித்துவர ஈசனின் அருள் கிட்டும். மன அமைதி, சந்தோஷம் ஆகியவற்றைப் பெறுவதற்கு இவரை மனதார நினைத்து வேண்டலாம்.

தமிழகத்தின் மிகப்பழமையான ஆலயங்களில் மறைந்திருக்கும் சிற்பக்கலை அதிசயங்களை அறிந்துகொள்வதோடு, நாள்பட்ட பிணிகளை நீக்கும் எளிய வழிபாட்டு முறைகளைக் கற்றுக்கொண்டு, உங்கள் குடும்பத்தில் ஆரோக்கியத்தையும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் நிலைநிறுத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com