தாயார் மகாலட்சுமிக்கு மிக உகந்த வாசனைப் பொருட்களில் ஒன்று மருதாணியாகும். வெறும் கைகளோடு பூஜை செய்வதை விட, ஸ்ரீ மகாலட்சுமிக்கு உகந்த சிவப்பு வண்ணத்தோடும் நல்ல வாசனையோடு நம் கைகளில் மருதாணி வைத்துக்கொண்டு தூப தீப ஆராதனை செய்யும்போது தாயார் இன்னும் மகிழ்கிறாள். மற்ற காலங்களில் மருதாணி வைத்துக் கொள்ளாவிட்டாலும் விசேஷ நாட்களில் மருதாணி வைத்துக்கொண்டு பூஜை செய்யலாம். அதோடு, சிறந்த பக்தையாக விளங்குபவர் கையில் கட்டாயம் மருதாணி வைத்துக்கொள்ள வேண்டும். மருதாணியின் மகிமையை விளக்கும் ஒரு புராண நிகழ்வை இந்தப் பதிவில் காண்போம்.
இராமாயணக் காவியத்தில் ஸ்ரீராமர், அசுரன் ராவணனை வதம் செய்துவிட்டு சீதா தேவியை பத்திரமாக மீட்டபோது, அன்னை சீதா தேவி ஸ்ரீ ராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்” என்று கூறினார். அதோடு மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டாள். அதற்கு அந்த மருதாணி செடிகள் “எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உனது முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னைப் போல அனைத்துப் பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும் எங்களுக்கு” என்றன.
அதைக்கேட்ட சீதை, “உன்னதமான உனது குணத்திற்காக நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்ற வரத்தைத் தந்தார் சீதா பிராட்டி.
அதனால்தான் இன்றும் வட இந்தியர்கள் தங்கள் வீட்டு திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா என்று நடத்துகிறார்கள். இதன் காரணம், ஸ்ரீ மகாலட்சுமியின் அருளாசி மணமகளுக்கும் திருமணத்தில் கலந்துகொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம். அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் தமது கையில் வைக்கும்போது மருதாணி வைக்கப்பட்ட கை சிவந்தால் எந்த நபர் மருதாணி வைத்தாரோ, அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
வெள்ளிக்கிழமையில் மருதாணியை ஸ்ரீ மகாலட்சுமியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்து கொண்டால் எந்தத் துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீ மகாலட்சுமி அருளாசியும் பரிபூரணமாகக் கிடைக்கும். அதுவும் ஐப்பசி மாதம் மருதாணியை நாம் கைகளில் வைத்துக் கொண்டால் மருதாணி செக்கச் சிவந்து என்று நம் கைகளில் பிடித்து நமக்கு ஸ்ரீ மகாலட்சுமியின் பரிபூரண அருளாசியை பெற்றுத் தரும்.