மன சங்கடங்களைத் தீர்க்கும் மஹாசங்கடஹர சதுர்த்தி வழிபாடு!

கணபதி வழிபாடு
கணபதி வழிபாடு
Published on

தெய்வங்களுள் யானை முகமும் மனித உடலும் நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு காட்சியளிக்கும் விநாயகப் பெருமான்  மிக எளிமையான கடவுள். வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர்.  இவரையே முழுமுதற்கடவுள் என்று போற்றி வழிபடுகிறோம். மாதந்தோறும் சுக்லபட்சத்தில் அதாவது வளர்பிறையில் அமாவாசை கழிந்த நான்காம் நாள் சதுர்த்தி திதி வரும். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியை நாம் விநாயகர் பிறந்த நாளாக, விநாயக சதுர்த்தியாக கோலாகலமாக, விமரிசையாக வழிபடுகிறோம். மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தியன்று கோயில்களில் காலை நேரங்களில் கணபதி ஹோமம் செய்யப்படு.ம்.

அதேபோல, மாதாமாதம் தேய்பிறை சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தியாக விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது. கோயில்களில் மாலை நேரத்தில் விநாயகருக்கு அபிஷேகம், கோயிலுக்குள்ளேயே சுவாமி பிரதட்சணம் வருவது என்று விசேஷ வழிபாடுகள் நடைபெறும். தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி, அதாவது நமக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் போக்கும் சதுர்த்தி என்று போற்றுகின்றன புராணங்கள். அன்றைக்கு நாம் செய்யும் விநாயகர் வழிபாடு நம் சங்கடங்கள் அனைத்தையும் போக்கும் என்பது நம்பிக்கை.

‘சங்கடம்’ என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ‘ஹர’ என்றால் நீக்குவது என்று பொருள். வருடத்தில் 11 சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹாசங்கடஹர சதுர்த்தி  வழிபாட்டில் கிடைக்கப்பெறும். வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப்பெற்று எல்லா வளங்களும் பெற்று வாழ மஹாசங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானதாகிறது.

இந்தத் தேய்பிறை சதுர்த்தியைக் கொண்டாடும் பழக்கம் எப்படி வந்தது என்பதற்கு புராணத்தில் ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு சமயம் வானத்தில் பிரகாசமான ஒளியோடு உலா வந்து கொண்டிருந்த சந்திர பகவான், விநாயகர் தனது பெரிய தொப்பையுடன் மூஷிகத்தின் மேல் வந்து கொண்டிருந்த காட்சியைப் பார்த்து கிண்டலாக சிரிக்க, கோபங்கொண்ட விநாயகர், ‘உனது ஒளி மங்கட்டும்!’ என்று சாபம் கொடுத்தார். அதைக்கேட்டு சந்திர பகவான் நடுநடுங்கிப் போனார். பூமிக்கு சூரிய ஒளியைப் போல சந்திரனின் ஒளியும் மிகவும் அவசியமாயிற்றே? அதனால் விநாயகரே தனது சாபத்தை தளர்த்தி, ‘வளர்பிறை சதுர்த்தியில் உன்னைக் காண்பவர்கள் அபவாதம் அடையட்டும். அந்த அபவாதமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியான பிள்ளையார் சதுர்த்தியில் அவரை பூஜித்தால் தீர்ந்து விடும்’ என்றும் வரம் அருளினார்.

இதையும் படியுங்கள்:
பசியை கட்டுப்படுத்த உதவும் 10 எளிய வழிகள்! 
கணபதி வழிபாடு

ஆனால், தேய்பிறை சதுர்த்தியில் சந்திரன் உதயமாகும் இரவு நேரத்தில் அவரை பூஜித்து பின் சந்திர தரிசனமும் செய்பவர்களுக்கு அவர்கள் மன சங்கடங்களையெல்லாம் தீர்த்து எல்லா நலங்களையும் வழங்குகிறார். எனவேதான் இந்த தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. மஹாசங்கடஹர சதுர்த்தியன்று காலையிலிருந்து வெறும் பழம், பால் மட்டும் சாப்பிட்டு விரதமாக இருந்து மாலையில் விநாயகர் கோயில் அபிஷேகம், பிரதட்சணம் ஆகியவற்றை தரிசிக்கலாம் அல்லது நாமே வீட்டில் விநாயகர் படத்திற்கு எருக்கமாலை அணிவித்து, அஷ்டோத்திர அர்ச்சனை செய்து மோதகம், சுண்டல், அவல், பொரி, பழங்கள் போன்ற பிரசாதங்களை நைவேத்தியமாக அளித்து நம் கோரிக்கைகளை அவர் முன்வைத்து மன சங்கடங்கள் விலக மனமார வேண்டிக்கொண்டு வழிபடலாம். பிறகு சந்திர தரிசனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

விநாயகரை வணங்காமல் எந்த ஒரு காரியமும் ஆரம்பிக்கப்பட மாட்டாது.  பூஜைகள், ஹோமங்கள், யாகங்கள் எல்லாவற்றுக்கும் ஆரம்பம் விநாயகர் வழிபாடுதான். முழுமுதற் கடவுளான விநாயகருக்கு உகந்த மஹாசங்கடஹர சதுர்த்தி நாளை (22.08.2024) அனுசரிக்கப்படுகிறது. அனைத்து விநாயகர் கோயில்களிலும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த மஹாசங்கடஹர சதுர்த்தியன்று நாமும் விநாயகரை வழிபட்டு நம் மன சங்கடங்களிலிருந்து விடுபட்டு  சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com