மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்: வேண்டிய வரம் தரும் 6 வார வழிபாட்டு ரகசியம்!

ஆடி மாதத்தில் அன்னை காமாட்சியை வழிபட்டு வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் அடையும் எளிய வழிகள்.
காமாட்சி அம்மன் - Mangadu Temple
காமாட்சி அம்மன் - Mangadu Temple
Updated on

சென்னை அருகிலுள்ள மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், பார்வதி தேவியின் பஞ்சாக்னி தவம் நடந்த சக்தி தலமாக போற்றப்படுகிறது. ஆடி மாதத்தில் வளையல் சாற்று, ஊஞ்சல் உற்சவம், பொங்கல், கூழ் வார்த்தல், மகா அபிஷேகம், 108 கலச அபிஷேகம், கோ பூஜை போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

ஸ்ரீ சக்கர தரிசனம் வறுமை நீங்கி செல்வ வளம் தரும் என நம்பப்படுகிறது. ஆடி மாதம் பிறந்துவிட்டால் போதும் இங்கு திருவிழாக் கோலம்தான். அதிலும் குறிப்பாக ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபாடுகள் செய்வது இங்கு மிகவும் விசேஷமாகும்.

இந்த வளையல்கள் பிரசாதமாக பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இது சுமங்கலி பாக்கியத்தையும், வம்ச விருத்தியையும் தரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் இடுவதும், கூழ் வார்த்தலும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஸ்ரீ சக்கரத்தை ஆடி மாதத்தில் தரிசிப்பது வாழ்வின் அனைத்து வறுமைகளையும் நீக்கி செல்வ வளத்தைப் பெருக்கும். ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு மகா அபிஷேகம், 108 கலச அபிஷேகம் மற்றும் கோ பூஜை போன்ற சிறப்பு வழிபாடுகள் வெகு விமர்சையாக நடைபெறும்.

தபசு காமாட்சி:

அன்னை பார்வதி தேவி சிவபெருமானை அடைவதற்கு பஞ்சாக்னி (5 நெருப்புகளுக்கு நடுவில்) கடுந்தவம் புரிந்த தலம் இது. இங்கு அன்னை "தபசு காமாட்சியாக" அருள்புரிகிறாள்.

காமாட்சி அம்மன் வீற்றிருக்கும் மாங்காடு திருத்தல வரலாறு:

சிவபெருமானும் பார்வதி தேவியும் கைலாய மலையில் இருந்த பொழுது பார்வதிதேவி விளையாட்டாக ஈசனின் கண்களை மூட பிரபஞ்சம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் ஏற்பட்ட சாபத்தை போக்க இறைவன் அவளை தவம் செய்யும்படி மண்ணுலகுக்கு அனுப்ப, தேவி இந்த இடத்திற்கு வந்து பஞ்சாக்னியின் மத்தியில் தனது இடது காலை புனிதமான நெருப்பின் மீது வைத்து, வலது காலை மடித்து தவம் செய்தார்.

காஞ்சிபுரத்திற்கு திருமணத்திற்காக வருமாறு கூறிய சிவபெருமானை தியானித்தபடி ஒரு கையில் ஜெபமாலையை வைத்துக் கொண்டு இக்கோவிலில் தனி சன்னதியில் காட்சி தருகிறாள்.

மாஞ்சோலைகள் நிறைந்த பகுதியில் நெருப்பின் மீது நின்ற நிலையில் தவமிருந்து ஈசனை அடைந்தார் என்பதே இக்கோவிலின் தல வரலாறு. மாமரங்கள் நிறைந்த இந்த இடத்தில் அம்பிகை தவம் இருந்ததால் இந்த இடம் "மாங்காடு" என்றும் அம்மனை "மாங்காடு காமாட்சி அம்மன்" என்றும் அழைக்கப்படுகிறது.

தேவி அந்த இடத்தை விட்டு சென்று பிறகு அவள் மூட்டிய நெருப்பின் வெப்பம் அங்குள்ள அனைத்து உயிரினங்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது. ஆதிசங்கரர் புனித யாத்திரை மேற்கொண்ட பொழுது மாங்காட்டிற்கு வருகை தந்து தேவியால் மூட்டப்பட்ட நெருப்பின் வெப்பத்தை தணிப்பதற்காக அந்த இடத்தில் ஒரு அர்த்தமேரு சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். இன்றும் கோயிலின் கருவறையில் அந்த ஸ்ரீ சக்கரம் இருப்பதை நாம் காணலாம். இந்த ஸ்ரீ சக்கரம் தேவியின் தாந்திரீக வடிவமாக கருதப்படுகிறது.

காமாட்சி அம்மன் - Mangadu Temple
காமாட்சி அம்மன் - Mangadu Temple

மகாமேரு:

அன்னை செய்த தவத்தின் உஷ்ணம் தனிய ஆதிசங்கரர் மாங்காட்டுக்கு வந்த சமயம் எட்டு மூலிகைகளினால் ஆன "அஷ்ட கந்தம்" அர்த்தமேரு என்னும் ஸ்ரீசக்கரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இந்த ஸ்ரீ சக்கரம் ராஜ யந்திரமாகும். அதாவது ஆமை (கூர்ம) வடிவத்தை அடித்தளமாக அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற்புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையும், அதன் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரமும் உண்டாக்கப்பட்டுள்ளது.

எட்டு மூலிகைகளால் ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் உருவாக்கியதால் இதற்கு அபிஷேகம் செய்யப் படுவதில்லை. ஜவ்வாது சந்தனம், புனுகு போன்ற பொருட்கள் சாற்றப்படுகின்றன. இக்கோவிலில் ஸ்ரீ சக்கரத்திற்கே முக்கிய வழிபாடு சிறப்பாக நடத்தப் படுகிறது. இங்கு நடைபெறும் குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதம்: வழிபாடு முதல் கூழ் செய்வது வரை... தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்!
காமாட்சி அம்மன் - Mangadu Temple

பஞ்சலோகத்தாலான ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. தபஸ் பண்ணும் நிலையில் காமாட்சி மோன நிலையில் இருப்பதால், மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் ஒரு கையில் கிளியோடும், மறு கையில் கரும்போடும் கூடிய சாந்தமே உருவான "ஆதி காமாக்ஷி" அம்மனை இங்கு நம்மால் தரிசிக்க முடியும். மாமரத்து அடியில் அம்மன் தவம் செய்ததால் இங்கு தலவிருட்சமாக மாமரம் உள்ளது.

திருமணத் தடை நீக்கும் காமாட்சி அம்மன் எலுமிச்சை பரிகாரம்:

வைர கணையாழி:

தனது சகோதரி காமாட்சியின் திருமணத்திற்காக மகாவிஷ்ணு சீர்வரிசையுடன் வந்து மாங்காட்டில் காத்திருக்கிறார். இங்கு விஷ்ணு பகவான் காமக்ஷியின் திருமணத்திற்காக கொண்டு வந்த மோதிரத்தை (கணையாழி) தன் உள்ளங்கையில் ஏந்தியபடி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். எனவே இங்கு வந்து அம்மனை தரிசித்த பிறகு அருகில் உள்ள வைகுண்டப் பெருமாள் கோயிலையும் தரிசிப்பது முழுமையான பலனைத்தரும்.

அசுரர்களின் குருவான சுக்கிர பகவான், தனது இழந்த பார்வையை மீண்டும் பெறுவதற்காக இத்தலத்தில் உள்ள ஈசனை வழிபட்டு பேறு பெற்றார். சுக்கிரன் வழிபட்டத்தலம் என்பதால் திருமணத்தடை, குழந்தைப்பேறு ஆகியவற்றிற்காக இங்குவந்து வழிபடும் பக்தர்கள் ஏராளம். அம்மனுக்கு 6 வாரங்கள் தொடர்ந்து இரண்டு எலுமிச்சம் பழங்கள் வாங்கி வந்து வழிபட நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆடித் திருவிழா: வாழ்வில் அற்புதம் நிகழ்த்தும் 7 சக்திவாய்ந்த அம்மன் கோவில்கள்!
காமாட்சி அம்மன் - Mangadu Temple

எப்படி செல்வது?

சென்னை குன்றத்தூர் மற்றும் பூந்தமல்லிக்கு இடையே மாங்காடு அமைந்துள்ளது. கோயம்பேடு, போரூர், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளிலிருந்து மாங்காடுக்குச் செல்ல நிறைய அரசு போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் மாங்காடு திருத்தலத்தின் முழுமையான மகிமையை அறிந்து, உங்கள் வாழ்க்கையில் தொடரும் திருமணத் தடைகள், பணக் கஷ்டங்கள் மற்றும் செவ்வாய் தோஷப் பிரச்சினைகளை 6 வார எலுமிச்சை பரிகாரத்தின் மூலம் எளிதாக நிவர்த்தி செய்து சுபிட்சம் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com