மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மன்: அறிய வேண்டிய அற்புதத் தகவல்கள்!

Mangadu Sri Kamakshi Amman: Amazing information to know!
Mangadu Sri Kamakshi Amman: Amazing information to know!
Published on

காமாட்சியம்மன் என்றதும் நம் நினைவிற்கு வருவது காஞ்சிபுரம்தான். ஆனால், காமாட்சி அம்பாள் முதலில் மாங்காட்டில் தவமியற்றிய பிறகே காஞ்சியில் எழுந்தருளினாள் என்று காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாங்காடு காமாட்சிக்கு ஆதிகாமாட்சி, தபஸ் காமாட்சி என்ற பெயர்களும் உண்டு. மாங்காட்டில் ஒற்றை மாமரத்தடியில் ஸ்ரீ காமாட்சி அம்பாள் தவமியற்றி பின்னர் காஞ்சியிலே ஈசனை மணம் புரிந்து கொண்டதாக ஐதீகம்.

பார்வதி தேவி பல தவங்களை இயற்றியுள்ளாள். ஆனால், அவற்றில் மிகக்கடுமையான தவம் மாங்காட்டில் இயற்றிய தவமே. அன்னை பார்வதி தேவி ஈசனோடு மீண்டும் இணைவதற்காக தவமியற்றிய திருத்தலம் மாங்காடு.

ஒரு சமயம் கயிலையில் பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை விளைட்டாக மூடினாள். அதனால் உலகமே இருள, கோபமடைந்த ஈசன், பார்வதி தேவியை சபித்து பூலோகத்தில் தவமியற்றி மீண்டும் வருமாறு பணித்தார். அன்னை பார்வதி தேவியும் மாங்காடு தலத்திற்கு வந்து நெருப்பில் தவமிருந்தாள். மாங்காட்டிலே காமாட்சியாய் அவதரித்த அன்னை ஈசனை வேண்டி பல காலம் காத்திருந்தாள். ஆனால், பலன் ஏதுமில்லாத காரணத்தினால் ஈசனைக் காண வேண்டும் என்பதால் ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து நடு குண்டத்தில் ஊசி முனையில் ஒற்றைக் காலில் சிவனின் அருள் வேண்டி கடுந்தவமியற்றினாள். இதனால் அம்பாள் இத்தலத்தில் ‘தபசு காமாட்சி’ என்று அழைக்கப்படுகிறாள்.

மாங்காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்த பார்வதி தேவியின் மீது கருணை கொண்ட ஈசன், அம்மைக்கு அருள்புரிய முடிவு செய்து அன்னையிடம் அசரீரியாக காஞ்சிக்கு செல்லும்படியும், தான் அங்கு வந்து மணம்புரிந்து கொள்வதாகவும் கூறினார். ஈசனின் சொல்படி அன்னை காஞ்சி மாநகருக்குச் சென்று அங்கு மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள். காஞ்சியில் அம்மையை மணம் செய்தருளினார் சிவபெருமான்.

ஈசனை மணந்து கொள்ளும் ஆர்வத்தில் தான் தவத்திற்காக வளர்த்த பஞ்ச குண்டங்களை அணைக்காமல் மாங்காட்டில் இருந்து காஞ்சி சென்ற காரணத்தினால் அந்தத் தீயின் வெப்பம் தாங்காமல் அப்பகுதியில் இருந்த மக்கள் துவண்டு துன்புற்றனர். பார்வதி தேவி விட்டுச் சென்ற நெருப்பைக் குளிர்விக்க ஆதிசங்கரர் அங்கு எழுந்தருளி அர்த்தமேரு ஸ்ரீசக்ரத்தை நிறுவினார். இதன் மூலம் மாங்காடு திருத்தலம் குளிர்ந்தது.

அம்பாள் இத்தலத்தில் கிழக்கு நோக்கி தனி சன்னிதியில் காட்சி தருகின்றார். பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக, அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன. மூலஸ்தானத்தில் உள்ள அம்பாள் வலது திருக்கரத்தினில் கிளியையும் தலையில் பிறைச் சந்திரனை சூடியும் காட்சி தருகிறாள்.

ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் 43 திரிகோணங்களைக் கொண்டது. இது ‘அஷ்டகந்தம்’ எனப்படும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டதால் இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. சந்தனம், புனுகு சாத்தி குங்குமார்ச்சனை செய்து வழிபடுகின்றனர். விஜயதசமி அன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று மட்டும் ஸ்ரீசக்ரத்தை தங்கக் கவசத்தில் நாம் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளிக் கவசத்தில் தரிசிக்கலாம். அர்த்தமேரு ஸ்ரீசக்ரத்திற்கு கூர்ம உருவத்தை அடித்தளமாக்கி அதன் மீது மூன்று படிக்கட்டுகள் அமைத்து அதன் மேல் 16 இதழ் தாமரை மற்றும் அதற்கு மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன் மீது ஸ்ரீசக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த அர்த்தமேருவிற்கு 18 முழப்புடைவை அணிவிக்கிறார்கள். அர்த்தமேருவிலேயே அம்பாள் வாசம் செய்வதாக ஐதீகம்.

நவகன்னியர்
நவகன்னியர்https://tamil.oneindia.com

மூலஸ்தானத்தில் அம்பாளாக வழிபடப்படும் ஸ்ரீசக்ரம் மற்றும் ஸ்ரீசக்ரத்திற்குப் பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன்மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவமியற்றும் காமாட்சி என மூன்று அம்பாள்களை இத்தலத்தில் தரிசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
உடல் உஷ்ணப் பிரச்னைகளைத் தவிர்க்கும் பார்லி!
Mangadu Sri Kamakshi Amman: Amazing information to know!

அம்பாள் ஐந்து குண்டங்களில் தீயை வளர்த்து, நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும், வலது காலை இடது காலின் தொடைக்கு மேற்புறமாகவும், தனது இடது திருக்கரத்தினை நாபிக்கமலத்திற்கு அருகிலும், வலது திருக்கரத்தினில் ஜபமாலையுடன் கண்களை மூடிய நிலையில் அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்தார். இத்தலத்தில் உள்ள நவகன்னிகைகள் சன்னிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அம்பாள் தவமியற்றியபோது நவகன்னிகைகள்தான் காவல் புரிந்ததாக ஐதீகம்.

புரட்டாசி மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று இத்தலத்தில் நிறைமணி தரிசனம் நடைபெறுகிறது. அன்று இனிப்பு, பழங்கள், காய்கறிகள், தானியங்கள் இவற்றால் அர்த்தமண்டபம், தபஸ் மண்டபம் மற்றும் முன்மண்டபத்தை அலங்கரிக்கிறார்கள். இந்த நிறைமணி தரிசனத்தைக் கண்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com