

மார்கழி மாதத்தை ‘பீடை மாதம்’ என்றுதான் நாம் அனைவருமே கூறுகிறோம். மார்கழி மாதத்தில் எந்தவிதமான சுப காரியங்களும் செய்யக் கூடாது என்ற கருத்தும் காலம் காலமாகவே நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் மார்கழி மாதம் என்பது பீடை மாதமா அல்லது புண்ணிய மாதமா என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மார்கழி மாதம் என்றால் பீடுடைய மாதம் என்று பொருள். காலப்போக்கில் இந்த பீடுடைய மாதம்தான் பீடை மாதமாக மாறி விட்டது. பீடுடைய மாதம் என்றால் உயர்வான மாதம் என்று அர்த்தம். இங்கே ‘பீடு’ என்பது உயர்வான, பெருமையான என்ற அர்த்தத்தை குறிக்கிறது. மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம்தான்.
மார்கழி மாதத்தில் தினமும் விடியற்காலையில், பெருமாள் கோயில்களில் திருப்பாவையும், சிவன் கோயில்களில் திருவெம்பாவையும் பாடப்படுகிறது. மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டுக்காகவே உருவான மாதம் என்பதால் இந்த மாதத்தில் மங்கல காரியங்கள் எதுவும் நடத்தப்படுவதில்லை.
மார்கழி மாதத்தின் தனிச் சிறப்புகள் என்னவென்றால், வீதி எங்கும் புள்ளி வைத்த கோலங்களும் கோயில்களில் விடியற்காலையிலே ஒலிக்கும் பஜனை பாடல்களும்தான். ‘மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்’ என்று கோதை நாச்சியார் திருப்பாவையில் ஆராதனை செய்த மாதம் இது.
மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களை பொறுத்தவரையில் வெறும் ஒருநாள் கால அளவே ஆகும். அந்த வகையில், கணக்கிட்டால் நமக்கு ஒரு மாதம் என்றால் தேவர்களுக்கு வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே. அதாவது ஒரு மாதத்திற்கு இரண்டு மணி நேரம் விகிதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம், அதாவது ஒரு நாள்.
இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகிறது. இந்தக் காலத்தை உத்திராயணம் என்று அழைக்கிறோம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை 6 மாத காலம் இரவு பொழுதாக அமைகிறது. இதை தட்சிணாயணம் என்று அழைகிறோம்.
தேவர்களை உறக்கத்திலிருந்து எழுப்பி வரவேற்கும் விதமாகதான், மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் ஆறு மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள் வண்ணக் கோலம் இட்டு, கோலத்தின் நடுவே விளக்கேற்றி, சாணத்தில் பூசணிப்பூவை வைப்பார்கள். இந்த அதிகாலை நேரத்தில் வீசும் காற்று உடலுக்குப் பல நன்மைகளை தரக் கூடியது என்கிற காரணத்தினால்தான், நம் முன்னோர்கள் அந்த வேளையில் எழுந்து கோலமிட்டு, நீராடி, கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
அது மட்டுமில்லாமல், பாற்கடல் கடையப்பட்டதும், மகாலட்சுமி அவதரித்ததும், அமுதம் பெற்றதும் இந்த மார்கழியில்தான். ஆகவே, நாமும் இந்த மார்கழியில் விடியற்காலையில் நீராடி, பெருமாளை தொழுதால், நிச்சயமாக மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெற முடியும் என்பது ஐதீகம்.