

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
அழகுக்கு அழகு செய்யும் நகைகளை அணிந்த கன்னியரே! ஆயர்பாடி என்ற செழிப்பும், வளமும் மிக்க நகரில் சீரும், சிறப்புமாக வாழும் தோழிகளே, வாருங்கள் நீராடச் செல்வோம். நீராடிவிட்டு, நந்தகோபன் மகனைப் போற்றி மகிழ்வோம். அதோ வானில் முழு நிலவு தோன்றுகிறது; அது வையகம் எங்கும் ஒளி பரப்புகிறது. அது பின்னிரவின் ஆகாய அதிசயத்தை அழகுறக் காட்டவும் செய்கிறது. ஆனால் அது தொடர்ந்து ஒளி அமுதைப் பொழிய முடியாது.
ஆமாம், அதோ மெல்ல கிழக்கு வெளுக்க ஆரம்பிக்கிறது. கம்பீரமாக எழுந்துவரும் அந்தப் பகலவனுக்கு இடம் கொடுத்துவிட்டு, அந்த முழுமதி மறையுமுன், வாருங்கள், ஆற்றில் நீராடச் செல்வோம். சூரிய உதயமும், சந்திர அஸ்தமனமுமான இந்த அருமையான விடியற் பொழுது நம் கண்ணனைப் பாட மிகவும் உன்னதமான தருணம். நம் ஆயர்பாடியின் தலைவனாக விளங்குகிறான், நந்தகோபன். அவன் தன் கையில் வேலேந்தியிருக்கிறான். ஆம், நம்மையெல்லாம் காப்பதற்காக நம் பகைவர்களை, நம் எதிரிகளை அந்த வேலால் விரட்டி அடிக்கிறான். அந்த வேல் போன்ற அழகிய விழிகளைக் கொண்டவள் அவனுடைய மனைவி யசோதா பிராட்டி. இவர்களின் வளர்ப்புப் பிள்ளையாகிய கண்ணப் பெருமான், அழகிய கரிய நிறம் கொண்டவன். ஆனாலும் கண்ணுக்கு இனியவன், கருத்துக்குப் புதியவன். சூரியன் போல பிரகாசிக்கும் அவனுடைய ஒளிமிகு முகத்தில், விரிந்த தாமரை மலர்களாய் கண்கள் சிவந்து காணப்படுகின்றன. அவன் வேறு யாருமல்ல; ஸ்ரீமன் நாராயணனே, அவனுடைய அம்சமே! நமக்கு நம் வாழ்நாள் முடிவில் முக்தி (பறை) அருளும் பெருங் கருணை வள்ளல் அவன். அவனைப் புகழ்ந்து பாடிக் கொண்டாடுவோம்; அப்படிப் பாடி மகிழும் நம்மை இந்த உலகமே புகழும்!