திருப்பாவை - பாடல் 10: இனிமையானவனே... நாராயணனே!

மார்கழி - 10 (25.12.2025)
Thiruppavai song - 10
Thiruppavai song - 10Img Credit: Shakthi Online
Published on

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும்புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய், அருங்கலமே,

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

பெண்ணே, ஒருவேளை, நீ முற்பிறவியில் எம்பெருமானை எண்ணி நோன்பு மேற்கொண்டிருப்பாயோ? அதனால்தான் அவனுடன் சொர்க்கத்தில் வசிப்பதுபோல இப்போது தூக்க சுகத்தை அனுபவிக்கிறாயோ? தூக்கம் என்ற கற்பனையிலேயே சஞ்சரித்துக் கொண்டிருப்பதை விடுத்து, யதார்த்த உலகிற்கு வா. சுற்றிலும் ஒலியாக பல சங்கேதங்களை உணர்ந்தும் உன்னால் எப்படி தொடர்ந்து உறங்க முடிகிறது? சரி, அந்த அரைகுறை தூக்கத்திலிருந்து விடுபட மனமில்லை என்பதால், எழுந்து வந்து கதவைத்தான் திறக்க மாட்டாய், ஆனால், ஏதாவது பதிலும் பேசமாட்டாயோ? நம் நாராயணன் இனிமையானவன், கருணை மிக்கவன்.

இதை ஒரு சலுகையாக எடுத்துக் கொண்டு விட்டாயோ? ஆனால் துளசி மணம் கமழ, நம் கோயிலில் நம் வருகைக்காகக் காத்திருக்கும் அந்தப் பரம்பொருளை அலட்சியப்படுத்த உனக்கு என்ன கல் மனதா? அவனைப் போற்றித் துதித்தால், நாம் மேற்கொண்டிருக்கும் நோன்புக்குரிய பலனை அவன் நிச்சயம் அருள்வானே, உனக்கு இதுவும் தெரியும்தானே?

இதற்கு முந்தைய யுகத்தில் கும்பகர்ணன், தனக்கு ‘நித்யத்துவம் வேண்டும்‘ என்று வரம் கோரினான். ஆனால் அரக்கனான அவன் இறப்பின்றி வாழ்ந்தால், அவனால் அவனியே அல்லலுறும் என்றறிந்த பரம்பொருள், அவனுடைய நாக்கைப் பிறழச் செய்து ‘நித்திரத்துவம்‘ என்று கேட்க வைத்தான். அதாவது நிரந்தர தூக்கம்! அரக்கனே ஆனாலும், தூக்கத்தில் அவனால் துர்ச்செயல்களைச் செய்யவே முடியாது, அல்லவா? அதனாலேயே அவனுடைய அசுர பலமும் அடங்கிக் கிடக்கும்தானே? இப்படிப்பட்ட நீடித்த தூக்க ஆர்வம் உள்ளவர்களை கும்பகர்ணனோடு ஒப்பிட்டு கேலி செய்வார்கள். ஆனால், நீ அவனையும் விஞ்சி விடுவாய் போலிருக்கிறதே! பெண்மைக்கு ஒவ்வாத இயல்பாக சோம்பலை வளர்த்துக் கொண்டிருக்கும் பெண்ணே, வா, கிடைத்தற்கரிய நல்நகையே, மெல்ல எழுந்து வா, கதவைத் திற.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com