திருப்பாவை - பாடல் 11: மாசு மருவற்றவன் கோபாலன்!

மார்கழி - 11 (26.12.2025)
Thiruppavai song - 11
Thiruppavai song - 11Img Credit: Venkatnagaraj blogspot
Published on

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று நெருகச் செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

நம் கண்ணன்தான் எத்தனை எளிமையானவன்! பராக்கிரமம் மிகுந்த பல வீரச் செயல்களை பாலக வயதிலேயே புரிந்தாலும், அவன்தான் எவ்வளவு அமைதியாக இருக்கிறான், நம்முடன் அனுசரணையாகப் பழகுகிறான்! நமக்குச் சமமாக நம்முடன் விளையாடுகிறானே! அவன் பகட்டு கௌரவம் பார்க்கிறானா? வறட்டு வீம்பு பேசுகிறானா? கன்றுகள் ஈன்ற கறவைப் பசுக்களிடம் பால் கறக்கும் பணி செய்யவும் அவன் தயங்கியதில்லையே! அது தன் தகுதிக்குக் குறைவு என்று எண்ணியதில்லையே!

இடைக்குலத் தோன்றலாக, கவுரவம் பாராத சாதாரணனாக அவன் விளங்குகிறானே; அதேசமயம் அவன்தான் எத்தகைய பலசாலி! தன்னை எதிர்ப்போரை அனாயசமாகக் கிள்ளியெறியும் ஆற்றல் கொண்டவன்!

அத்தகையத் தூயவனை தழுவத் துடிக்கும் உன் உள்ளுணர்வு எங்களுக்குத் தெரியாதா? அந்த எண்ணத்தை நீ தெரிவிக்காவிட்டாலும் உன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதை வெளிக்காட்டி விடுகின்றனவே! இருந்தும் இந்த போலித் தூக்கம் ஏன்?

நம் பகுதியில் உள்ள தோழியர் அனைவரும் உன் வீட்டு முன் குழுமியிருக்கிறோம். பலரும், மெய்ம்மறந்து கண்ணன் புகழ் பாடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய பக்தி ஆர்வத்தில் கொஞ்சம்கூட நீ கொள்ளவில்லையே! ஒருவேளை, நாங்கள் பாடுவதைக் கேட்கும் இந்த இரவல் பக்தியால் நீ தன்னிறைவு அடைந்து விடுகிறாயோ! என்ன வேடிக்கை இது!

நீ செல்வம் மிகுந்தவள்தான். அதனாலேயே செருக்கும் கொண்டாயோ? அவ்வாறு சேர்த்த செல்வத்தை மிகையாகக் கொண்டதால், இறுமாப்பும் அடைந்திருக்கிறாயோ? ஒருவேளை, இனி, கண்ணனின் நட்பு எதற்கு என்று விபரீதமாகக் கருதுகிறயோ? இல்லாவிட்டால் இப்படி உறங்கிக் கொண்டிருப்பாயா? இந்த அற்ப சுகமான தூக்கத்தில் என்ன பலனைக் காண முடியும் என்று நீ எதிர்பார்க்கிறாய்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com