

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
சரி, நீதான் வெளியே வர மறுக்கிறாய். நாங்களாகவே உன் வீட்டிற்குள் புகுந்து உன்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்துவிடவும் எங்களால் முடியும்தான். ஆனால், உன் வீட்டு வாசலைக் கடந்து எங்களால் உள்ளே வரமுடியவில்லையே! ஆமாம், உன் வாசல் பக்கமெல்லாம் ஒரே சேறாக இருக்கிறது. ஆனால் இது மண் சேறு அல்ல; பால் சேறு. ஆமாம், எங்கோ மேயப் போயிருக்கும் தங்கள் கன்றுகள் அங்கே இருந்தபடி பசியால் கதறுவதை உன் வீட்டருகே கட்டிப் போடப்பட்டிருக்கும் தாய் எருமைகள் கேட்டு, தாய்மை உணர்வால், பால் சுரக்க, அப்படி ஏராளமாகப் பொழிந்த பால் இந்தப் பகுதி முழுவதையுமே சேறாக்கி விட்டனவே!
அதனால்தான் நாங்கள், இந்த சேற்றை மிதிக்கவும், அதனால் வழுக்கி விழவும் நேராதபடி, உன் வீட்டு முன்னே உள்ள ஒரு கிராதியைப் பற்றிக் கொண்டு, வெளியே இருந்தவாறே உன்னைக் கூவிக்கூவி அழைக்கிறோம். கீழே தரையில் பால் சேற்றின் குளிர், மேலே ஆகாயத்திலிருந்து பனி விழுவதால் ஏற்படும் குளிர் இரண்டுமாக சேர்ந்து எங்களை சிரமத்துக்குள்ளாக்குகின்றன.
இத்தகைய ஆநிரைகளின் சொந்தக்காரனான ஆயனின் தங்கையே, இனியும் எங்களை அல்லலுறச் செய்யாதே! சீதையைக் கவர்ந்து சென்ற ராவணன் மீது போர் தொடுத்து, இலங்கையோடு அவனையும் சேர்த்து அழித்த நாராயணனாகிய ராமபிரானின் அதி அற்புதச் செயலைப் பாடுகிறோம். அந்த வீரக் காட்சிகள் உன் மனத்திரையில் ஓடவில்லையா? அதைக் கேட்டாவது உடனே சிலிர்த்து எழ மாட்டாயா? எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்துவிட்டார்களே, அந்த விவரம் தெரியுமா உனக்கு? ஆனால், நீ மட்டும் கும்பகர்ண பேருறக்கம் கொண்டிருப்பதன் மர்மம் என்ன?