

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 13
புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
நம் தலைவனாம் நாராயணன்தான் செயற்கரிய செயல்கள் எத்தனை அருளியிருக்கிறான்! பிரமாண்ட கொக்கு வடிவம் கொண்டு வந்தான் பகாசுரன். ஆனால் அந்தப் பேருருவத்தைப் பார்த்து கொஞ்சம்கூட நம் கண்ணன் பின்வாங்கவில்லையே! பளிச்சென்று பாய்ந்து, கொக்கின் அலகுகளைப் பற்றி, அப்படியே இரண்டாகப் பிளந்து அதன் உயிரைப் போக்கியிருக்கிறானே! ராமனாய் அவதாரம் எடுத்துப் பிறன்மனை விழைந்த, ராவணனின் பத்து தலைகளையும் கொய்தானே!
பிரமிக்கத் தக்க அந்த வீரச் செயலைப் போற்றி, அவன் புகழ் பாடியபடி நம் தோழியர் நதிக்கரைக்குச் சென்று விட்டார்கள். நாங்கள் நட்பு கருதி உனக்காகக் காத்திருக்கிறோம். எழுந்து வா.
கீழ் வானத்தில் வெள்ளிக் கீற்றாய் ஆதவன் உதித்து விட்டான். அதன் காரணமாகவே ஒளி குன்றிய குருகிரகமான வியாழனும், சூரியனுக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் வானிலிருந்து மறைந்து விட்டான். புலர்ந்த பொழுதை பறவைகள் கீச்சிட்டு வரவேற்கின்றன.
பெண்ணே, தாமரை மொக்குபோல மூடியிருக்கும் உன் விழி இதழ்களைப் பிரித்து கண் மலர்வாய். விடியலின் அடையாளங்கள் சுற்றிலும் சூழ, எப்படி உன்னால் உறக்கத்தில் தொடர்ந்து ஆழ முடிகிறது? இந்த அதிகாலையில் நதியில் நீராடினால் உடலும், உள்ளமும் அடையும் குளிர்ச் சிலிர்ப்பை அனுபவிக்கும் ஆவல் உனக்கு இல்லையா? நம் கண்ணனை நாளெல்லாம் நினைப்பதில்தான் எத்தனை உற்சாகம் மேலிடுகிறது!
‘மாதங்களில் மார்கழி‘யான எம்பெருமானை இந்த மாதத்தில் நினைத்து நினைத்து நெஞ்சுருக பாடுவதுதான் எத்தனை சிறப்பானது! உறக்கத்தால் நீ இழப்பதுதான் அதிகம் என்பதைப் புரிந்து கொள்ள மாட்டாயா? இப்படித் தூங்குவதன் மூலம் நல்ல நேரத்தைத் திருடுகிறாயே, இந்தக் கள்ளத்தனம் உனக்குத் தேவையா? எழுந்து வா, அனைவரும் ஒன்றாக நீராடுவோம்.