

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 14
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
என்ன வேடிக்கை பார், நேற்று நீ, ‘நாளை அதிகாலையில் நான் வந்து உங்களையெல்லாம் எழுப்புகிறேன்,‘ என்று சூளுரைத்தாய்! எந்த நம்பிக்கையில் அவ்வாறு உன்னால் சொல்ல முடிந்தது? நேற்றைய உன் பேச்சை நம்பி நாங்கள் உனக்காக இன்று காத்திருந்தோமானால் என்ன ஆகியிருக்கும்? நீயும் துயிலெழுந்து வந்திருக்க மாட்டாய், நாங்களும் நீ வந்து எழுப்பினால் உறக்கம் கலையலாம் என்று அலட்சியமாக அல்லவா இருந்திருப்போம். நல்லவேளை உன் பேச்சுக்கு நாங்கள் மதிப்பு கொடுக்கவில்லை. ஆனால் என்ன வேதனை, இப்போது உன்னை நாங்கள் வந்து எழுப்ப வேண்டியிருக்கிறது!
கொடுத்த வாக்கை எப்படி இத்தனை சுலபமாக மறந்து விட்டாய்? அதற்காக நீ கொஞ்சமும் வெட்கப்படுவதாகவே தெரியவில்லையே! உன்னை நாங்கள் மட்டுமல்ல, உங்கள் வீட்டு புழக்கடையில் உள்ள தடாகத்து மலர்களும் அல்லவா கேலி செய்கின்றன.
ஆமாம், ஆதவனைக் கண்டு செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து மகிழ்கின்றனவே, நிலவு கண்டு மலரும் ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்திருக்கின்றனவே, அவை கைக்கொண்டிருக்கும் இந்த நல் பழக்கத்தை உன்னால் ஏன் மேற்கொள்ள முடியாமல் போனது?
காவியுடை அணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச மகிழ்ச்சியுடன் கோயில்களை நோக்கி பரபரப்புடன் செல்கிறார்களே! அங்கே சென்று திருச்சங்கு முழங்க வேண்டிய தம் பணிக்குத் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாதே என்ற அவர்களுடைய பொறுப்புணர்வு நம்மைச் சிலிர்க்க வைக்கிறதே! இந்த சங்கேதங்களை நீ புரிந்து கொள்ளவில்லையா?
சங்கு, சக்கரம் ஏந்திய வலிமையான, நீண்ட கரங்களைக் கொண்டவனும், தாமரை போன்ற அகன்று மலரும் விழிகளை உடையவனுமான கண்ணனைப் பாட உனக்கு இன்னுமா மனம் வரவில்லை? எழுந்து வா, எங்கள் அருமைத் தோழியே!