

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 15
எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
நேரம் ஆக, ஆக வெளியே காத்திருக்கும் தோழிகள் எரிச்சல் அடைகிறார்கள். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? இத்தனைக்கும் அவர்கள் எல்லாம் அந்தத் தோழியின் நன்மைக்காகத்தான் அப்படி அவளுடன் மல்லுக் கட்டுகிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தினால் கோபம்தானே வரும்?
‘‘அடியேய் (எல்லே), நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உன் ஒருத்திக்காக நாங்கள் இத்தனை பேர் காத்திருப்பதில் உனக்கு சந்தோஷம்தானா, இது சரியா?‘‘ என்று உரக்கக் கேட்டு கோபித்தார்கள்.
இப்போதுதான் உறைத்தது போல, உறக்கத் தோழி மெல்ல பதிலளித்தாள்: ‘‘சரி, சரி, கோபிக்காதீர்கள். நான் இதோ வந்து விடுகிறேன்,‘‘ என்றாள்.
‘‘சரிதான், இவ்வளவு நேரம் எங்களைக் காக்க வைத்து விட்டு, நாங்கள் கோபப்படுகிறோம் என்கிறாயே!‘‘ என்று தோழிகள் வாதாடினார்கள்.
‘‘சரி, நீங்களே பேச்சில் வல்லவராக இருங்கள்; நான் சண்டைக்காரியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்,‘‘ என்று சமாதானத்துக்கு வந்தாள் சோம்பேறித் தோழி.
‘‘இது என்ன பொல்லாத்தனம்? நாங்களெல்லாம் உன் வீட்டின் முன் உனக்காக தவம் கிடக்க வேண்டுமா?‘‘ என்று கேட்டு மீண்டும் கோபித்தார்கள் தோழிகள்.
‘‘அதுசரி, எல்லோரும் வந்து விட்டார்களா என்ன?‘‘ என்று, தான் தாமதப்படுத்துவதை நியாயப்படுத்தும் நோக்கில் கேட்டாள் தோழி.
‘‘ஓ, அந்த சந்தேகம் வேறா உனக்கு? நீயே வந்து எங்களை எண்ணிப் பார்த்துக் கொள்,‘‘ என்று சவால் விட்டார்கள் தோழிகள். கூடவே, ‘‘பெண்ணே, குவாலயபீடம் என்ற பிரமாண்ட யானையின் தந்தங்களைப் பற்றி, அப்படியே சுழற்றி அடித்துக் கொன்ற நம் கண்ணனை வழிபட, இன்று இனியும் காலம் தாழ்த்தாதே. எதிரிகளை எளிதாக வேட்டையாடுபவனான நம் மாயக்கண்ணனை தரிசிக்க எழுந்தோடி வா,‘‘ என்று மேலும் வற்புறுத்தினார்கள்.
ஒருவழியாக வீட்டிலிருந்து வெளியே வந்தாள் தோழி.