

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண
வாயில்காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
எங்களுக்கெல்லாம் தலைவனாக விளங்குபவன் நந்தகோபன். அவன் வசிக்கும் அழகிய மாளிகையில்தானே அவன் வளர்த்துவரும் எங்கள் கண்ணனும் இருக்கிறான்! அவனைப் பார்க்க வேண்டுமே. ஆனால் வாயில் காப்பானுடைய அனுமதி இன்றி உள்ளே நுழைய முடியாதே, என்ன செய்ய? இவனை எப்படி சரிகட்டுவது? ‘கண்ணனைப் பார்க்க வேண்டும்,‘ என்று கேட்டால் அத்தனை சுலபமாக அனுமதித்து விடுவானா என்ன? ‘அப்புறம் நந்தகோபனுக்கு யார் பதில் சொல்வது?‘ என்று குறுக்குக் கேள்வி கேட்பானே! ஒரே வழிதான் இருக்கிறது. நம் கண்ணனுக்கு முன்னாலேயே இந்தக் காவலனுக்கு சரணாகதி செய்து விடுவோம். அதுதான் இப்போதைக்கு சரி.
"வாயிலைப் பாதுகாக்கும் கம்பீரக் காவலனே, கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசலைக் காவல் புரியும் இனிய சேவகனே, உன் தயவு எங்களுக்கு வேண்டும். ஆமாம், ஆயர்குல சிறுமியரான நாங்கள் கண்ணனை நாடி வந்திருக்கிறோம். உன்னுடைய பொறுப்புணர்வை நாங்கள் மதிக்கிறோம். ஆனாலும் நாங்கள் உட்புக வசதியாக இந்த மாளிகைக் கதவைத் திறந்து விடுவாயாக. எங்களுக்கு கண்ணனால் ஆக வேண்டிய செயல் ஒன்று உள்ளது. ஆமாம், நேற்று எங்களிடம் பேசிக் கொண்டிருந்த அவன், எங்களுக்கு சிறிய அளவிலான பறை ஒன்றை அன்பளிப்பாகத் தருவதாக வாக்களித்திருக்கிறான். கையால் தட்டி ஒலி எழுப்பக்கூடிய தப்பட்டையாகிய அந்த இசைக் கருவியை அவனிடமிருந்து பெற நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் நன்கு நீராடி, தூய்மையாகவே விளங்குகிறோம். எங்கள் கண்ணன் உறங்கிக் கொண்டிருந்தானானால், பாடல்களைப் பாடி அவனைத் துயிலெழுப்பி மகிழ்விக்கவும் உள்ளோம். உனக்கு இருக்கும் அதிகார தோரணையால் முதலிலேயே உன் வாயால் ‘முடியாது‘ என்று மறுத்துச் சொல்லிவிடாதே. தயவுசெய்து, மூடியிருக்கும் இந்தக் கதவைத் திறந்து எங்களை உள்ளே அனுமதிப்பாயாக.‘‘