

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
கண்ணனிடமிருந்து பறையைப் பெற்றுக் கொள்ளவே தாங்கள் வந்திருப்பதாக சிறுமிகள் சொல்லக் கேட்ட வாயில் காப்பான், அவர்களுடைய வெகுளியான முகங்களைப் பார்த்து, அவர்கள் பொய் சொல்லவில்லை என்று நம்பினான். ஆகவே, அவர்களை மலர்ச்சியுடன் மாளிகையின் உள்ளே அனுப்பினான். வாயில் காப்போனை வேண்டி, மாளிகையினுள்ளும் புகுந்தாயிற்று. இனி அடுத்து யாரிடமெல்லாம் கோரிக்கை வைத்தால் கண்ணன் தரிசனம் இனிதே கிடைக்கும்? ஆம், முதலில் நந்தகோபர். கம்சனின் சிறைக்கூடத்திலிருந்து சிசுவான கண்ணனை மீட்டு வந்த வசுதேவர், இவரிடம்தானே அவனை அளித்து, வளர்த்து வருமாறு கேட்டுக் கொண்டார்!
அந்த நந்தகோபர் புகழை முதலில் பாடுவோம். ‘யாசிப்போரின் முழு திருப்திக்கு பசி ஆற்றி, ‘போதும், போதும்‘ என்று அவர்கள் மனம் நிறைவடையும்வரை பொருள்களை வாரி வழங்கும் வள்ளல் பெருமானே, நந்தகோபரே, வணக்கம். தாங்கள் எழுந்தருள வேண்டும்.‘
அவர் அந்தச் சிறுமிகளைப் பார்த்து மென்மையாய்ச் சிரித்தார். சம்மதம் தருகிறாரோ? அடுத்தது கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதை. ‘கொடி போன்ற இடையுடைய பெண்களுக்கெல்லாம் தலைவியே, மென்மனம் கொண்ட அம்மையே, யசோதா, கண்ணனுக்குத் தாயாக நீ என்ன தவம் செய்தனையோ! மங்களகரமான தீபச் சுடர் போன்று முகப்பொலிவுடன் பிரகாசிப்பவளே, நீயும் எழுந்தருள்வாய்.‘
அடுத்து கண்ணனின் அண்ணன் பலராமன். ‘செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்திருக்கும் வீரனே, செல்வத் திருமகனே, பலராமா, நீயும் எழுந்தருள்வாய்.‘
பிறகு யார்? கண்ணன்தான். ‘வாமனனாய் வந்து ஓங்கினாய், நெடிதுயர்ந்தாய், விண்ணைக் கிழித்து உலகையே அளந்தாய், தேவர்களுக்கெல்லாம் தலைவனே, நீயும் உறக்கம் நீங்கி விழித்தெழுவாயாக. எங்களுக்கு உன் திவ்ய தரிசனம் நல்குவாயாக.‘