

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தர் விரலி, உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
ஆனால், கண்ணனை தரிசிக்க முன்னே சொன்ன மூவரை விடவும் மிக முக்கியமான ஒருவரின் அனுமதியும் வேண்டுமே? யார் அவர்? அவள்தான் நப்பின்னை! ஆமாம், கண்ணனின் மனைவியான நப்பின்னைதான்! யசோதையின் சகோதரனான கும்பகனின் மகளல்லவா இவள்! இவளை மணக்க கண்ணன் பலப் பரீட்சையில் இறங்க வேண்டியிருந்ததே! ஆமாம், ஏழு எருதுகளை அடக்கியதற்காக அவனுக்குப் பரிசாகக் கிடைத்தவள்தானே இந்த நப்பின்னை! ‘போர்த்திறம் மிக்க வலிய யானைகளைக் கொண்டவன், எங்கள் தலைவன் நந்தகோபன். அவன் எந்தப் போரிலும் பின்வாங்காமல், வெற்றியை மட்டுமே கண்டுவரும் மாவீரன்.
அத்தகைய நந்தகோபனின் மருமகளே, நப்பின்னை பிராட்டியே! உன்னை வணங்குகிறோம். சிறுமியரான எங்களைக் கருணைக் கண் கொண்டு பார்ப்பாயாக. உன் கூந்தலில் கமழும் நறுமணம் எங்கும் சுகந்தமாகப் பரவுகிறதே! அது எங்களையும் ஈர்க்கிறதே! அதோ, பொழுது புலர்வதன் அடையாளமாக கோழிகள் (சேவல்கள்) நாலாபுறத்திலிருந்தும் கூவுகின்றன; ‘ஊராரே எழுந்திருங்கள்,‘ என்று அவை உற்சாகமாக அறிவுறுத்துகின்றன. குருக்கத்திக் கொடிகளில் அமர்ந்திருக்கும் பலவகை குயில்கள் இனிய குரலில் காலை பூபாளத்தை ஒலிக்கின்றன! இவையும் நமக்கு புத்துணர்வை, சுறுசுறுப்பை போதிக்கின்றன. ஆதவன் உதித்து விட்டான். அந்தப் பகலவனைப் போன்ற பிரகாசமிக்க கண்ணனைத் தரிசிக்க சிறுமியரான நாங்கள் நெடு நேரமாகக் காத்திருக்கிறோம். நீண்ட மலர் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே, உன் கணவனின் புகழைப் பாடவே சிறுமியர் நாங்கள் வந்துள்ளோம். உலகோரை உய்விக்கும் அந்தப் பெருங்கருணையை வாழ்த்திப்பாடி மகிழ வந்துள்ளோம். ஓளி சிந்தும் வண்ண மயமான, அழகிய வளையல்கள் ஒலிக்க வந்து, உன் செந்தாமரைக் கரத்தால் தாள் நீக்கிக் கதவைத் திறவாய். நாங்கள் கண்ணன் தரிசனம் பெற அருள்வாய்!‘‘