

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா, வாய் திறவாய்
மைத்தடங்கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
குத்து விளக்கு மென்மையாய் எரிகிறது. அந்தச் சிறிய ஒளி, அறையின் அப்போதைய இருட்டை விரட்ட முயல்கிறது. அறையின் நடுவே அலங்காரக் கட்டில் அழகாக அமைந்திருக்கிறது. யானை தந்தத்தால் ஆன, அழகு வேலைப்பாடுகள் நிறைந்த, நளினமான, எழில்மிகு கட்டில்அது. அதன் மேல் நித்திரை சுகம் தரும் மிருதுவான பஞ்சு மெத்தை விரிக்கப் பட்டிருக்கிறது. அதன்மேல் அதனினும் மென்மையான நப்பின்னை பிராட்டி அமர்ந்திருக்கிறாள். அவள் மணமிக்க மலர்களைச் சூடியிருக்கிறாள். அவளுடைய மார்பில் தலை வைத்து கண் மூடி துயில்கிறான் மாயக்கண்ணன்.
அவன் சூடியிருக்கும் மலர் மாலையும் நறுமணம் பரப்புகிறது. கண்ணா, நீ வந்து எங்களுடன் பேச மாட்டாயா? உனக்காகவே நோன்புத் தவமிருந்து உன்னைத் தரிசிக்க வந்திருக்கும் எங்கள் மீது உன் கடைக்கண் பார்வை படராதா? மை தீட்டிய பேரழகுக் கண்களை உடைய நப்பின்னையே, உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் உன் கணவனை எழுப்ப மாட்டாயா? ஆனால் அதற்கு உனக்கு மனசிருக்காதுதான். நேசமிகு மனைவியின் பாசமிகு பரிவு அது. அவனை எழுப்பினால் அவன் உன்னை நீங்கக் கூடும் என்று நீ கவலையுறுகிறாய். அவனைக் கண நேரம் கூட பிரிந்திருக்க உன்னால் இயலவில்லை. இப்படி சொந்தம் கொண்டாடுவது சிறந்த மனைமாட்சிதான். ஆனால் அவனது தாமரை விழிப்பார்வை எங்கள் மீதும் விழாதா என்று நாங்கள் ஏங்கிக் காத்திருக்கிறோம். அவன் வியாபகன். எங்கும் நிறைந்திருப்பவன். அவன் அருள் அனைவருக்கும் பொது. அதை மறுக்காதே. அதற்காகத்தானே நாங்கள் பாவை நோன்பிருக்கிறோம். அதற்குப் பலன் வேண்டாமா? அது எங்களுக்குக் கிட்ட நீ உதவ மாட்டாயா?"