

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
நம் ஐயன் அருளும் முக்தியைப் பெற, வாழ்நாள் முடிவுவரை நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? அந்தப் பரந்தாமனை நம் துணைவனாக அடைந்து விட்டால், அந்த பேறு இப்போதே, இம்மையிலேயே நமக்குக் கிட்டிவிடுமே! ஆகவே அவனை அடைய நாம் நோன்பு மேற்கொள்வோம். பாவையராகிய நாம் அனுசரிப்பதாலேயே இந்த விரதத்தைப் பாவை நோன்பு என்று அழைப்போம். பனி விழும் இந்த மார்கழி மாதம் முழுவதும் இந்த விரதத்தைக் கடைபிடிப்போம். எப்படி கடைபிடிப்பது என்பதற்கான, மூத்தோர் விதித்த நியமங்களை உறுதியுடன் பின்பற்றுவோம்.
அந்த விரத நாட்களில் நம் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளக் கூடாது; மாதம் முழுவதும் எப்போதும், எவ்வேளையிலும் பால் அருந்தவே கூடாது. ஏன் இப்படி? நம் கண்ணன் பாலையும், வெண்ணையையும் விரும்பி உண்பவனல்லவா? உரிமேல் வைத்திருந்தாலும், திருடியாவது உட்கொள்ளும் பாலகனல்லவா? அவனுக்காக நாம் இவற்றைத் தியாகம் செய்வோம். தன்னை முன்னிருத்தி மேற்கொள்ளும் நோன்புக்காக, அவற்றை நாம் விட்டுக் கொடுக்கிறோம் என்றறிந்தால், அவனுடைய பரிவான அன்பு நம் மீது படராதா? அதோடு இந்த நோன்பின் இன்னொரு முக்கியமான விதி, பகலவன் உதிக்கு முன்னரே நாம் துயிலெழுந்து நீராடப் போக வேண்டும்; கூந்தலில் மணமலர் சூடுவதைத் தவிர்க்க வேண்டும்; இல்லாவிட்டால் அந்த வாசத்தின் கிறக்கத்தில் உறக்க நேரம் நீண்டுவிடும்! மனதைத் தீய எண்ணம் தீண்டாதிருக்க வேண்டும்; வாயும் தீயன பேசாதிருக்க வேண்டும். நல்ல நட்பை, பாசத்தைப் பகையாக்குவதாகிய பிறரைக் கோள் சொல்லும் இயல்பைத் தவிர்க்க வேண்டும். இறையடியாருக்கும், ஏழைகளுக்கும் அவர்கள் வயிராற உண்டு மகிழுமாறு அன்னதானம் அளிக்க வேண்டும். இதையெல்லாம் பார்க்கும் பரந்தாமன், நாம் அற்ப சுகங்களுக்கு அடிமையாகாதவர்கள் என்று நம்மைப் பற்றி அறிந்து, நாம் முயற்சிக்காமலேயே தானே நம்மை வந்தடைவான்.