திருப்பாவை - பாடல் 20: ஓடோடி வந்து பக்தனைக் காக்கும் பேரருளாளன்; கலியுகக் கண்ணன்!

மார்கழி - 20 (04.01.2026)
Thiruppavai song - 20
Thiruppavai song - 20Img Credit: Venkatnagaraj blogspot
Published on

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே, துயிலெழாய்

செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா, துயிலெழாய்

செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய், திருவே, துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்ப்பவாய்.

விளக்கம்:

உலகில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். எல்லோருமே ஏற்றமிக்கவர்கள், தெய்வீக அனுக்ரகம் அளிப்பவர்கள். ஆனால் பக்தனுக்கு ஏதேனும் ஆபத்து என்றால், அவர்களில் முதலில் ஓடோடி வந்து காக்கும் பேரருளாளன் எங்கள் கண்ணன்தான். அவனே கலியுகக் கடவுள். ப்ரத்யட்ச தெய்வம்.

‘ஆதிமூலமே!‘ என்ற கஜேந்திரனின் அவலப் பிளிறல் கேட்ட உடனேயே, கொஞ்சமாவது யோசித்தானா? யார் குரல் அது, எதற்காக இத்தனை பரிதாபமாக அக்குரல் எழுகிறது என்றெல்லாம் அவன் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. அந்தக் குரல் தன் கருணையை எதிர்பார்க்கிறது, தன்னை ஏதோ ஆபத்திலிருந்து விடுவிக்கக் கோரும் தீனமான அபயக் குரல் அது.

ஆகவே, குரல் ஒலித்த அக்கணமே, பளிச்சென்று கருடன் மீதேறி பறந்து வந்த ஆபத்பாந்தவன் அல்லவா அவன்! வந்த வேகத்திலேயே, தன் சக்கரத்தை வீசி, யானையின் காலைப் பற்றியிருந்த முதலையின் தலையைத் துண்டித்தப் பாதுகாவலன் அல்லவா, அவன்!

பிரகலாதன் கேட்டான் என்பதற்காக, பக்கத்திலிருந்த தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மக் கடவுளும் இவன்தானே? இச்சம்பவங்கள் மூலம், தூய பக்தனின் அருகிலேயே இருப்பேன் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய வள்ளல் அல்லவோ அவன்!

இவன் நியாயத்துக்கு நேர்மையானவன். அதர்மத்தை அழிக்கும் ஆற்றல் மிக்கவன். இவனை நினைத்தாலே பகைவர்கள் பயம் கொள்வர். அத்தகைய வல்லவனே, எங்களுக்காக இப்போது துயில் எழுவாயாக.

பொற்கலசம் போன்ற மென்மையான கொங்கைகளைக் கொண்டவளே, நப்பின்னை அம்மையே, பவளச் செவ்வாய் உடையவளே, சிற்றிடை துலங்கும் பேரழகே, மகாலட்சுமியின் மறு உருவே, நீயும் எழுவாயாக. நோன்பு நோற்கும் எங்களைப் பாராட்டும் வகையாக விசிறியையும், கண்ணாடியையும் அன்பளிப்பாக வழங்கும் நீ, இப்போது எங்களை அருள் மழையில் நீராட்ட உன் மணாளனான கண்ணனின் கருணைப் பார்வையை வீசச் செய்வாயாக.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com