

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய், பெரியாய், உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே, துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
கண்ணா, உன் தந்தை நந்தகோபரின் ஆவினங்கள்தான் எத்தனை ஆரோக்கியமானவை! அவை குறிப்பிட்ட நேரத்தில் தாமாகப் பால் சுரக்கும் கருணை மிக்கவை ஆயிற்றே! யாரும் போய் அதன் மடிபிடித்து, பாத்திரம் ஏந்தி கறக்க வேண்டிய அவசியமே இல்லாமல், தானே பால் பொழியுமே! அவ்வாறு சுரக்கும் பாலைப் பிடித்து வைக்கப் பாத்திரங்கள் போதாதே! அப்படி வழிய, வழியப் பால் சுரக்கும் செல்வங்கள் அல்லவோ அவை! ஒருவேளை உன் அருகாமை இருப்பதால், உன்னை தினமுமே பார்க்கும் மகிழ்ச்சியால், உன் தடவலில் காணும் பேரின்பத்தால், நீ வழங்கும் தீவனங்களின் தெய்வீக ருசியால் அவை இவ்வாறு மிகையாகப் பால் சுரக்கின்றனவோ!
எம் தலைவனே, இப்போது எங்களுக்கும் அதேபோன்ற பாசம், பரிவு, நேசம் எல்லாம் காட்ட எழுந்தருள மாட்டாயா? வேதங்களால் போற்றப்படும் நாயகனே, உன்னை அந்த வேதங்களாலும் அறிய முடியாத அரியவனே! வீரம் மிக்கவனே, தஞ்சமடைந்தோரைக் காக்கத் தயங்காத தயாபரனே! உலகுக்கே ஒளி வழங்கும் பெருஞ்சுடரே! உன் அருள் வேண்டி நாங்கள் உன் வாசலில் காத்திருக்கிறோம். எங்கள் பொறுமையைக் கண்காணிக்கிறாயா, அல்லது உன் மீதான எங்கள் பக்தி எத்தனை வலிமையானது, எவ்வளவு நேரத்துக்குத் தாக்குப் பிடிக்கும் என்றும் சோதிக்கிறாயா? சற்றே விழி திறவாய், எங்கள் தெய்வமே!
உன்னைப் பகைத்த அரசர்கள் தோல்விதான் கண்டார்கள் என்றாலும், அதற்காக அவமானப்படாமல், நாணமுறாமல், வீரதீரமிக்க ஓர் ஆண்மகனிடம் வெற்றியை இழந்ததைத் தங்களுக்குப் பெருமையாகவே கருதினார்கள். உன்னைப் பழிவாங்கும் எண்ணமில்லாமல், உன் நட்பை, உன் அரவணைப்பை அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்களும் உன் மாளிகையின் வாசலில் உன் பாத தரிசனத்துக்காக தவமிருக்கிறார்கள். அவர்களைப் போலவே உன் முகமண்டலப் பேரொளி எங்கள் மீது படராதா என்று நாங்களும் ஏங்கிக் காத்திருக்கிறோம்.