

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கிழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச் சிறிதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தற்போல்
அங்கள் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
தங்களைவிட ஆற்றல் மிக்கவர்கள் யாருமில்லை; நாங்களே வீரத்தின் தவப்புதல்வர்கள், எங்களை வெல்ல யாரால் இயலும், என்றெல்லாம் எக்கத்தாளம் இட்ட அரசர்கள் எல்லோரும் உன்னைச் சரணடைந்து, உன் தரிசனத்துக்காக உன் மாளிகை வாசலில் ஏங்கிக் காத்திருக்கிறார்கள். ‘இந்த பரந்த பூமியையே ஆட்சி செய்தவர்கள் நாங்கள்,‘ என்று கொக்கரித்தவர்களெல்லாம், இந்த பூமியல்ல, விண்ணையும் ஒருசேர அளந்து ஆட்கொண்ட திருமாலே, உன் கடைக்கண் பார்வை கிட்டாதா என்று காத்திருக்கிறார்கள். உன் புகழ் பாடும் சத்சங்கத்தார் போல, நீ பள்ளி கொண்டிருக்கும் மஞ்சத்தைச் சுற்றிலும் நின்றுகொண்டு ‘ கருணை காட்டலாகாதா?‘ என்று ஏக்கமாகக் கேட்கிறார்கள்.
உன்னை எதிர்க்க முடியாத இயலாமையால் அவர்கள் வருந்தவில்லை; ஆனால் அதைவிட உன் நட்பு என்ற பிணைப்பை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களைப் போலவே நாங்களும் விழி இமைக்காது காத்திருக்கிறோம். மாமன்னர்களுக்கு அருள் செய்வதுதான் பிரதானம் என்று கருதி ஏழைகளாகிய எங்களைப் புறக்கணித்து விடுவாயோ, கண்ணா? மாட்டாய் என்றே நம்புகிறோம். உனக்கு ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்‘தானே! ‘கிண்கிணி‘ என மென்மையாய் ஒலிக்கும் சிறுமணி போன்ற செப்புவாய் கொண்ட செம்மலே, நீ உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும், மங்கலமான மணியோசைதானே! ஆதவனைக் கண்டு மெல்ல இதழ் விரிக்கும் தாமரை மலர் போல, உன் கண்ணிமைகள் மெல்லப் பிரியாதா? அந்த இமைகளினூடே சூரியனாகவும், சந்திரனாகவும் ஒளி வீசும் விழிகள் எங்கள் மீது படராதா? இந்தப் பேற்றினை அடைய நாங்கள் மாதவம்தான் செய்திருக்க வேண்டும். உன்னுடைய இந்தச் சிறு பார்வை ஒளிக்கீற்று போதுமே, கண்ணா, எங்களுடைய பாபங்கள், சாபங்கள் எல்லாமே அனல் கண்ட துகள்களாகி உருகி மறையுமே!