

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 23
மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திலிருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
மழைக்காலம் முழுவதும், தன்னுடைய மலைக் குகையில் உறங்கும் தன்மை கொண்டது சிங்கம். ஆனால் அது விழிக்கும்போது, அதன் கண்கள் நெருப்புத் துண்டங்களாக ஜொலிக்கின்றன. இமை மூடிய விழிகளுக்குள் இத்தனை உக்கிரமான பார்வையா என்று பார்ப்போரை கதிகலங்க வைக்கும் கண்கள் அவை. தன்னுடைய உறுதியான கால்களால் குகைக்குள்ளேயே அங்கும் இங்குமாக அது வீரநடை போடுகிறது. அந்தப் பாத ஒலி குகைச் சுவர்களில் எதிரொலிக்கிறது. பளிச்சென்று தலையை சிலுப்பிக் கொள்ள, அதன் பிடரி மயிர் பொம்மி சிலிர்த்துப் பரந்து விரிகிறது.
பிறகு ஒரு தீர்மானத்துடன், தனக்கே உரித்தான ஆதிக்க கர்ஜனையுடன் அது குகையை விட்டு வெளியே புறப்படுகிறது. எங்கள் கண்ணனே, நீ அந்த சிங்கம் போன்றவன். உன் நிறம் என்னவோ காயாம்பூ வண்ணமாக இருந்தாலும், உன் பீடுநடை சிங்கத்தை ஒத்திருக்கிறது. உன் கண்கள் சுட்டு விழிச் சுடர்களாக விளங்குகின்றன. இந்த விழிகள் பக்தர்களைத் தண்ணிலவாக நோக்குகின்றன; பகைவருக்கோ உயிர் பறிக்கும் உக்கிரப் பார்வையை வீசுகின்றன. வா, கண்ணா, நீ உன் கோயிலிலிருந்து கம்பீரமாகப் புறப்பட்டு வா. உன் ராஜநடை உன் பெருமையைப் பறைசாற்றட்டும். நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து எங்களுக்கு அருள் செய்வாயாக. எங்கள் கோரிக்கைகளை செவிமடுத்து எங்களை ஆட்கொண்டு ரட்சிப்பாயாக. நாங்கள் என்ன கோரப்போகிறோம்? பொன்னா, பொருளா, வீடா, வசதியா, வயலா, பேரின்ப வாழ்க்கையா? எதுவுமில்லை, என்றென்றும் எங்களுக்கு உன் அருள் வேண்டும். அது ஒன்றே போதும். நீ அருகே இருக்கிறாய் என்ற தெம்பு எங்களை நெஞ்சுரம் கொள்ள வைக்கும். இத்தகைய உன் அருளால் கிட்டும் பேரின்பத்தைவிட வேறொன்று இருந்துவிட முடியுமா என்ன?