

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
கொன்றடச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏந்திப் பறை கொள்வான்
என்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
தன்னை மிஞ்சிய வள்ளல் இல்லை என்று இறுமாந்திருந்த மகாபலியின் செருக்கை அறுத்தவனே கண்ணா! 'உன்னிடம் யாராவது வந்து உதவி கேட்க வேண்டும் என்பதற்காகவே, யாரும் தன்னிறைவு அடைய முடியாதபடி உன் ராஜ்யத்தில் யாசகர்களை வளர்த்து வருகிறாயோ?‘ என்று அவனை கேலி செய்யும் வகையில் மண்ணுக்கும், விண்ணுக்குமாக ஓங்கி வளர்ந்தாயே உத்தமனே, அந்தத் திருவடிகளை நாங்கள் போற்றித் துதிக்கிறோம்.
சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை மாய்த்த வீரனே, உன் தீரத்தைப் பாடி, உன்னைச் சரணடைகிறோம்.
சக்கரமாக உருமாறி வந்த சகடாசுரனை, கொஞ்சமும் தயங்காமல், ஒரே உதையில் துண்டு துண்டாக உடைத்தெறிந்தாயே, அந்தத் திருப்பாதங்களை வணங்குகிறோம்.
கன்று வடிவில் வந்தான் வத்சாசுரன்; விளாமரமாக வந்தான் கபித்தாசுரன். அந்த இருவரையும் ஒருசேர அழித்து பூவுலகோர் இடர் களைந்தாயே, அந்தப் பெருங்கருணைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.
ஆமாம், அந்தக் கன்றை, விளாமரத்தின் மீது வீசி எறிந்து ஒரே நேரத்தில் இரு கொடியவர்களை வதம் புரிந்தாயே, பரம்பொருளே, உன் வீரக் கழலைப் போற்றுகிறோம்.
கோவர்த்தன மலையைக் குடையாக்கி, இந்திரன் அனுப்பிய மழை, வெள்ளமாகியப் பேரூழியிலிருந்து ஆயர்குலத்தோர் அனைவரையும் காத்த கருணைப் பெட்டகமே, சுண்டு விரலால் பெரிய மலையைத் தாங்கி ஆற்றலை வெளிப்படுத்தியவனே, உன் புகழ்பாடி, உன்னைத் துதிக்கிறோம்.
எத்தகைய பகைவர்களையும் உன் கை வேலால் அழித்தவனே, உன் வீசு வேகத்திற்கேற்ப பாய்ந்து சென்று எதிரிகளை அழித்துத் திரும்புமே அந்த வேலாயுதத்துக்கும், எங்கள் வணக்கம். இவ்வாறு, உன் வீரதீரச் செயல்களைப் பாடி உன்னருளைப் பெற நாங்கள் வந்திருக்கிறோம். எங்கள் மீது இரக்கம் காட்டி அருள் புரிய மாட்டாயா, கண்ணா?