

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 25
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே, உல்லை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
பூட்டப்பட்டிருந்த சிறைக்குள்ளே அவதரித்த பெருமானே, தேவகி – வசுதேவரின் எட்டாவது மகவாகத் தோன்றிய செம்மலே! அந்த எட்டாவது குழந்தையால்தான் தன் அந்திமம் நெருங்கும் என்ற அச்சத்தில் உழன்று கொண்டிருந்த உன் மாமன் கம்சன், உனக்கு முந்தைய ஏழு குழந்தைகளை அசுரத்தனமாகக் கொன்று எட்டாவதான உனக்காகக் காத்திருந்தான். ஆனால் அவனுக்கு எட்டாத வகையிலும், உன் அவதார நோக்கத்தை நிறைவேற்றிடவும் இடம் பெயர வேண்டியிருந்ததே! அதனால் தந்தையார் வசுதேவர் உன்னை ஆயர்பாடிக்கு சுமந்து வந்தாரே. விலங்குத் தளைகள் தகர்ந்தது போல, சிறைக் கதவும் உனக்காகத் தானே திறந்தது.
அதேபோல ஆர்ப்பரித்துப் பெருக்கெடுத்து ஓடிய யமுனை நதியும் நீர்ப் பிளந்து வழி கொடுத்தது. வசுதேவரின் தலைமீது ஒரு கூடையில் ஆரோகணித்திருந்த உன்னைக் காணும் ஆவலில் வானிலிருந்து பொழிந்தது மழைநீர். ஆனால் அந்த மழையால் நீயும், உன் தந்தையார் வசுதேவரும் பாதிக்கப்படக் கூடாதே என்பதற்காக ஆதிசேஷன் தன் ஐந்துத் தலைகளை விரித்து, குடையாய் உடன் வந்தான்.
இத்தனை சமிக்ஞைகள் உன் அவதார நேரத்தில் தோன்றின. ஆனாலும், என்ன வேதனை, மாமன் கம்சன் கண்களில் படாமல் நீ ஒளிந்து வாழ வேண்டியிருந்தது. அதற்கு இந்த ஆயர்பாடி உனக்கு இடமளித்தது. உனக்குப் புகலிடம் அளிக்க இந்த கோகுலம்தான் எத்தனை பேறு பெற்றிருக்க வேண்டும்!
உன்னால் வதம் செய்யப்படுவோம் என்று அறிந்திருந்த கம்சன் உன்னைக் கண்டு பிடிக்க இயலாததால் வயிற்றில் பயமென்ற நெருப்பைச் சுமந்தான். உன்னை அழிக்கும் எண்ணம் கொண்டிருந்த அவன், தான் அழிவோம் என்ற நடுக்கம் நெஞ்சில் உறையப் பெற்றான்.
இத்தகைய அருஞ்செயலைப் புரிந்த திருமாலே, உனது அருளை யாசித்தே நாங்கள் வந்திருக்கிறோம். அதைப் பெற, உன்னுடைய சிறப்பு குணங்களை, பக்தர்களுக்காக நீ மேற்கொண்ட அரும்பணிகளைப் பாராட்டி நாங்கள் உளமாறப் பாடுவோம். அவ்வாறு பாடுவதால், நாங்கள் துன்பம் நீங்கி, என்றென்றும் இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.