

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 26
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே, கொடியே, விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
பக்தர்களிடம் பேரன்பு கொண்டவனே, அவர்கள் துயர் தீர்க்க வந்துதித்த எம்பெருமானே! சிறப்பு மிக்க நீலக்கல் போன்ற நிறம் கொண்ட எழிலனே! எங்கள் மூத்தவர்கள் கையாண்ட மரபுகள்படியே, அவர்களின் அடியொற்றியே நாங்களும் நடந்து கொள்கிறோம். அவர்கள் சொல்லிக் கொடுத்தபடி இந்த நோன்பை நாங்கள் முழுமையாக நிறைவேற்ற அருள்வாய், கண்ணா. உன்னை வாழ்த்தி ‘பல்லாண்டு‘ பாடும் பெரியோர்களை எங்களை வழிநடத்தச் செய். அவர்களுடைய பக்திக் குரலுக்கு பக்க வாத்தியங்களாக உன் பாஞ்சஜன்ய சங்கும், பிற வலம்புரி சங்குகளும் முழங்கட்டும்; அதனால் அந்த பக்திப் பாங்கு மேன்மையுறட்டும்.
நோன்புக்குரிய மங்கல தீபங்களையும், கொடிகளையும் எங்களுக்குத் தந்து அருள வேண்டும், கண்ணா. (பாஞ்சஜன்ய சங்கு, உன் கைக்கு வந்ததும் ஓர் அற்புதமே அல்லவா? பஞ்சசன் என்ற அரக்கன் சாந்தீபனி என்ற ஆசார்யாரின் மகனைக் கொன்றுவிட்டு, கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான். தன் மாணவனான உன்னிடம், தன் மகனைக் கொன்ற அசுரனைப் பழிவாங்க வேண்டும், அதுவே நீ அவருக்கு அளிக்கக் கூடிய குருதட்சணை என்றும் ஆசார்யார் கேட்டுக் கொண்டார். உடனே புறப்பட்ட நீ வெகு எளிதாக பஞ்சசனை வதம் செய்து அவனை ஒரு சங்காக உருமாற்றி உன்னுடனேயே வைத்துக் கொண்டாய். பகைவனுக்கும் அருளினாய்!)
அந்தப் பாஞ்ச சன்னியம் ஓர் அசுர சங்கல்லவா? அதனாலேயே பேரிடியாய் அது முழக்கம் செய்யவல்லது அல்லவா! அதைக் கைக்கொண்ட அதிசூரனே, எங்கள் நோன்பு முழுமை பெற அருள் புரிவாய். ஆலிலையில் அமர்ந்து பிரளய வெள்ளத்தில் நீந்தி, எங்களையும் பிறவிப் பெருங்கடல் நீந்த வைக்கும் பரம்பொருளே, எங்களுக்கு உன் இன்னருள் கிட்டச் செய்வாய்.