

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 27
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உந்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
நட்பு நாடாதோரை, ஒருமித்த எண்ணத்துடன் கூடாதோரை, பகைவரை, வெகு எளிதாக வெற்றி கொள்ளும் எம் தலைவனே, கோவிந்தா! நீ எல்லா உயிர்களிடத்தும் சமமாக இருப்பவன்தான். ஆகவே எவர்க்கும் நீ பகைவன் இல்லை. ஆனால் உன்னை விரோதியாகக் கருதுபவருக்கும் நீ அருமருந்தாக விளங்குபவன். இந்த உன் புகழை, பறைமேளம் கொட்டி, பாடிக் களிக்க, சிறுமியராகிய நாங்கள் வந்தோம். உன் சாதனைகளைப் பாடலாகப் பாடும்போது, எங்களுக்கு உண்டாகும் உணர்ச்சிப் பிரவாகம் அற்புதமானது.
ஆமாம், அந்தச் சம்பவங்களில் எல்லாம் நாங்களும் உன்னுடனேயே இருந்த பிரமையும், பிரமிப்பும் எங்களுக்கு ஏற்படுகிறது. அதே நிகழ்ச்சிகள் மீண்டும் எங்கள் கண்முன்னே நிகழ்வது போலிருக்கிறது. உன்னுடைய பராக்கிரமங்களைக் கண்டு உள்ளம் நெகிழ்கிறது. எம் தலைவனே, கண்ணா, நீ எங்களுக்கு அருளோடு, பொருளையும் வழங்குவாயாக. அந்த அருளும், பொருளும் எங்களுக்கு இன்பத்தைத் தருவதாக இருக்கும். என்ன செய்வது, உலக வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாததாக ஆகிவிட்டதே! அதைத் தவிர்க்க முடியாதே! குறிப்பாக, சிறுமிகளாகிய நாங்கள் என்ன கேட்போம்? எங்களை அழகு செய்யும் நகைகளைத்தானே கேட்போம்? கைகளில் அணியும் வளையல்கள் (சூடகம்), மேல் கையில் அணியும் கங்கணம் (தோள்வளை), காதுகளில் அணியும் தொங்கட்டான்கள் (தோடு, செவிப்பூ), மற்றும் பாதச் சிலம்புகள் (பாடகம்) ஆகிய அணிகலன்களை அளிப்பாயாக. இந்த நகைகள் மட்டும் போதுமா, எழிலான ஆடைகளையும் வழங்குவாயாக. நீ அளிப்பதாலேயே புத்தொளி மிளிரும் அந்த நகைகளையும், உடைகளையும் அணிந்து கொண்டு, எங்கள் நோன்பு நிறைவடைந்ததைக் கொண்டாடுவோம், வா, கண்ணா. நாங்கள் சிறுமியர் அனைவரும் உன்னுடன் கூட்டாக அமர்ந்து நெய் மிதக்கும் பால்சோறு உண்போம். எடுத்து உண்ணும்போது அந்த நெய் உள்ளங்கையிலிருந்து முழங்கைக்கு வழியும்! அத்தனை சுவையானது அந்தப் பால்சோறு!