

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா, நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
நாங்கள் வெகுளிகள், அப்பாவிகள். எங்கள் பசுக்களுக்குப் பின்னாலேயே சென்று அவற்றை மேய்ப்பவர்கள். ஒரே சீரான தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள். ஒரு வட்டத்துக்குள்ளேயே சுழன்று வருபவர்கள். அந்த வட்டத்துக்கு வெளியே வந்து சிந்திக்கத் தெரியாதவர்கள். பசிக்குத் தயிர் சோறு உண்ணும் எளிமையானவர்கள். நாங்கள் அறிவார்ந்தவர்கள் அல்லர், திறமைசாலிகளும் அல்லர்; அதனாலேயே எங்களுக்குக் குறுக்கு புத்தி கிடையாது; எந்த வஞ்சகமும் தெரியாது. நாங்கள் உண்மையான அன்புக்கு அடிமையாகிக் கிடப்பவர்கள்.
அதனாலேயே நாங்கள் உன் அன்பு ஒன்றைத் தவிர வேறொன்றும் அறியோம். அதேசமயம், எங்களுக்கு ஓர் உண்மை தெரியும். அது என்ன தெரியுமா? உன்னைத் தலைவனாக அடைந்திருக்கிறோமே, அந்த பாக்கியத்தால் எங்களுக்கு வைகுந்த பிராப்தம் உறுதி என்பதை முழுமையாக நம்புகிறோம். இதைவிட பிறவிப் பயன் வேறென்ன வேண்டும், கண்ணா? குறை எதுவும் சொல்ல முடியாத கோவிந்தனே, நீ உடனிருக்கையில் எங்களுக்கு ஏது குறை, சொல்! உன்னை அணுகி நிற்பவர்கள் யாருக்குதான் என்னதான் குறை? உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க இயலாது என்பதை நாங்கள் பரிபூரணமாக உணர்கிறோம். அந்த நெருக்கத்தின் உரிமையால் உன்னை, ‘கண்ணா, மணிவண்ணா,‘ என்றெல்லாமும் ஒருமையில் அழைத்தோமே, இவ்வாறு உரிமை கொண்டாடுவதால், உன் உயர் சிறப்பு மங்கிற்றோ? இதற்காக எங்களை கோபித்துக் கொள்வாயா கண்ணா? நீ எங்களுக்கு வெறும் சகா மட்டுமா? எங்களுக்குச் சமமாக எங்களுடன் விளையாடும் தோழன் மட்டுமா, எங்களுக்குக் கருணைமிகு பாதுகாவலன் மட்டுமா, நாங்கள் வேண்டியதை அளிக்கும் வள்ளல் மட்டுமா, எங்கள் தெய்வமே நீதானே கண்ணா! உனக்காக நாங்கள் நோற்ற நோன்பின் உபசரணையை அன்புடன் ஏற்றுக் கொள்; எங்களுக்கு அருள் புரிவாய் எங்களுக்கு இனியவா!