

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 29
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
எங்கள் அன்புக்குரியவனே, கண்ணா, இந்த அதிகாலைப் பொழுதில் பொன் போன்ற உன் தாமரைப் பாதங்களை தரிசிக்க நாங்கள் வந்திருக்கிறோம். உலகோர் பார்வைக்கு நீ சாதாரணனாக இருக்கலாம்; மாடு மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் உதித்த எளியவனாகவே தோன்றலாம். ஆனால் எங்களுக்கு, நீ பெரிதும் உயர்ந்தவன், பேராற்றல் மிக்கவன். உன் சாகசங்களை அறியாதவர்கள்தான் உன்னை எளியோனாக நினைப்பார்கள். ஆனால் நாங்கள் உடனிருந்தே உன் ஆற்றல் மிகு வீரச் செயல்களைக் கண்ணாறக் கண்டவர்கள். காளிங்கன் என்ற கொடிய பாம்பின் மீது நின்றாடி, அவனை அடக்கி எங்களுக்கு அபயம் அளித்தவன் நீ; நில்லது பெய்த பெருமழையிலிருந்து கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்து ஆயர்பாடியையே காத்தருளிய பெருந்தகை நீ.
உன்னால் நாங்களும் ஆவினங்களும் மழைத் துன்பம் நீங்கி, அப்போது நிம்மதி அடைந்தோம். என்றென்றும் எங்கள் அன்புக்குரியவனே, உன்னிடம் இப்போது ஒரு வேண்டுகோள். சிறுமியர்களான எங்களுடைய நோன்பை நீ அலட்சியமாக எண்ணிவிடாதே. மார்கழி மாத உடற் சுகங்களைத் தியாகம் செய்துவிட்டு நாங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த விரதத்தின் லட்சியம் மிகவும் உயர்வானது. நாங்கள் கோரினோம்தான் என்றாலும், நீ தரும் ஆபரணம், ஆடை போன்ற சிறு பரிசுப் பொருட்களுக்காக நாங்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. அவையெல்லாம் தற்காலிகமானவை; நிரந்தரமில்லாதவை. எங்கள் நோக்கமே, எங்களுடைய எல்லா பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறந்து எங்களை உயர்வடையச் செய்ய வேண்டும் என்பதுதான். ஏழேழ் பிறவிகள், அதாவது ஏழு அல்ல, இரு ஏழு அல்ல, ஏழேழ், நாற்பத்தொன்பது பிறவிகளுக்கும் நீ எங்களை விட்டு நீங்காதிருக்க வேண்டும். எங்களை அத்தனை பிறவிகளிலும் அரவணைத்துக் காக்க வேண்டும். அந்தப் பிறவிகளில் எல்லாம், உனக்கு மட்டுமே சேவை செய்யும் அரும் பேற்றினை எங்களுக்கு நல்க வேண்டும். எங்களுடைய ஒரே பற்றுகோல் நீயாகவே என்றென்றும் விளங்க வேண்டும். எங்களுடைய பிற எல்லா விருப்பங்களையும், ஆசைகளையும், ஏக்கங்களையும், தாபங்களையும், கண்ணா, நீயே அழித்துவிடு.