

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
சிறு பாலகனாய், குறு உருவ வாமனனாக வந்த பரந்தாமன், மன்னன் மகாபலியிடம் மூன்றடி மண்ணை யாசகமாகக் கேட்டான். பிரபஞ்சத்துக்கே அதிபதியான ஸ்ரீமன் நாராயணனும் யாசகம் கேட்கிறான் என்றால் அதன் உள்ளர்த்தமே வேறல்லவா? கேட்போருக்குக் கேட்டதையெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்து, அதனால் மிகுந்த பெருமைச் செருக்குக் கொண்டிருந்தான் மகாபலி. அற்பத்தனமாக வெறும் மூன்றடி மண் கேட்கும் அந்த பாலகனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தான். பிறகு, உடனே அதற்கு சம்மதமும் தெரிவித்தான். அவ்வளவுதான், வாமனன் விஸ்வரூபனானான்!
பூமிக்கும் வானுக்கும் நடுவே இடைவெளியே இல்லையோ என்று பிரமிக்கத்தக்க வகையில் திரிவிக்கிரமனாய் உயர்ந்தெழுந்து இந்த பிரபஞ்சத்தையே தன் ஓரடியால் அளந்தான் அண்ணல். இரண்டாவது அடி, பூமி மொத்தப் பரப்பையும் அளந்தது. மூன்றாவது அடிக்கு இடம்? தெய்வ சங்கல்பத்தைப் புரிந்து கொண்ட மகாபலி, மண்டியிட்டு, அந்த அடியைத் தன் சிரம் மீது ஏற்றுக் கொண்டான். அப்படியே அவனை பாதாளத்துக்குள் ஆழ்த்தி, அவனுடைய ஆணவத்தையும் புதைத்து அழித்தான், ஆனந்தன். அந்தப் பரம்பொருளுக்கு மலர் சாத்தி வழிபடுவோம்.
அதற்குமுன் உடலும், உள்ளமும் குளிர நீராடுவோம். நாம் நோற்கும் இந்த நோன்பை, இயற்கையே நம்மைப் பாராட்டும் வகையில், நம் நாடெங்கும் மாதம் மும்மாரி பெய்யும்; நெற்கதிர்கள் செழித்து ஓங்கி வளர்ந்திருக்கும் நம் வயல்களினூடே பெருமகிழ்ச்சியுடன் மீன்கள் நீந்திக் களிக்கும். பசுமை மிக்க குவளை மலர்களில் வண்டினங்கள் தேன் பருகி மயங்கிக் கிடக்கும். மகாபலி போல அல்லாது கர்வம் அழித்த, மென்மையான மனம் கொண்ட பெரும் வள்ளல்களைப் போல பசுக்கள் ஏராளமாகப் பால் வழங்கும். மொத்தத்தில் அள்ள அள்ளக் குறையாத செல்வம் உலகோரிடையே பெருகும்.