

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 30
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
விளக்கம்:
அமிர்தம் பெறுவதற்காகப் பாற்கடல் கடையப்பட்டபோது அதிலிருந்து எழுந்த அற்புதங்களில் ஒன்றான, மாதவன் என்ற எம்பெருமானே, அதுவே உன் முதல் அவதாரமோ! அந்த அவதாரத்திலிருந்து, அடுத்தடுத்த அவதாரங்களிலும் அநியாயம் செய்த அரக்கர்களை வதைத்துப் பூவுலகில் அமைதி காத்தாயோ? ஆமாம், அந்த முதல் அவதாரமே, அந்த மாதவனே, மோகினியாக உருமாறி, தேவர்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்தளித்து, அசுரரை வெருட்டி விரட்டியதே! இந்த நாராயணனே கேசி என்ற அரக்கனையும் வீழ்த்தி, உலகோருக்கு நிம்மதி அளித்தவன், அதனாலேயே கேசவன் என்றும் பெருமையுடன் அழைக்கப்படுகிறான்.
இந்தப் பரம்பொருளை எண்ணி, சந்திரன் போல் ஒளிமிகு முகம் கொண்டு, பிரகாசமான அணிகலன்கள் அணிந்த சிறுமிகள், தம் சுகங்களைத் துறந்து, மிகக் கடுமையான பாவை நோன்பை ஒரு மாத காலத்திற்கு மேற்கொண்டார்கள். முப்பது நாட்களும் வைகறைப் பொழுதில் துயிலெழுந்து, நதி நீராடி, கண்ணனாகிய கோமானைப் போற்றித் துதித்தார்கள். இந்த சிரமங்களின் பலனாக கண்ணனைக் கண்ணாறக் கண்டார்கள். அவனுடைய அன்பையும், அருளையும் பெற்றார்கள். இவர்களுடைய இந்த இனிய அனுபவங்களை ஸ்ரீவில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த கோதை ஆண்டாள், பாமாலையாகக் கோத்திருக்கிறாள். சூடிக் கொடுத்த அந்தச் சுடர்க்கொடி இயற்றிய இந்தப் பாமாலையில் உள்ள முப்பது பாடல்களையும் மார்கழி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தப்பாமல் உள்ளம் உருகிப் பாடி மகிழ்பவர் அனைவருக்கும் அந்த கண்ணனின் பேரருள் கிட்டும். உயர்ந்த கம்பீரத் தோள்களையும், அழகிய கண்களையும் கொண்ட அந்த மலரோன், செல்வங்கள் எல்லாவற்றுக்கும் அதிபதியாகத் திகழ்பவன். அவனுடைய அருளும், ஆசியும், இணக்கமும் கிட்டும். அவனை இந்த மார்கழி மாதத்தில் துதித்து மகிழ்வோர் அனைவரும் நாளெல்லாம் வற்றாத செல்வச் செழிப்புடன் இனிதே வாழ்வார்கள்.