

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
மழைக்கு அதிபதியான வருணனே, உன்னிடம் ஒரு வேண்டுகோள். உன் வசம் நீ கொஞ்சம் கூட நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளாதே. ஆமாம், கடல் நீர் முழுவதையும் அப்படியே ஆவியாக்கி வானோக்கிக் கொண்டு செல். அங்கே அதை கருமேகமாக மாற்றிவிடு. ஆகாயமெங்கும் அவ்வாறு சூல் கொண்ட மேகங்கள் நீக்கமற நிறைந்திருக்கட்டும். கருமையே ஆனாலும் எல்லா திசையிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கார்முகில் வண்ணம் கொண்ட எங்கள் கண்ணனை நாங்கள் அந்த மேக ரூபமாகவே தரிசித்து மகிழ்கிறோம்.
கருமேகம் என்றால் மின்னல் இல்லாமலா? ஆம், அந்த மேகத்தினூடே பளீர், பளீர் என்று ஒளிக்கீற்று மின்னலாய் தோன்றட்டும் – எத்தகைய ஒளிக்கீற்று அது? தீயோரைக் கண்டால், தன் பக்தர்களைத் துன்புறுத்துவோரைக் கண்டால், எங்கள் பத்மநாபன் கையிலுள்ள ஒளிமிகுந்த சக்கரம் சீறிப் பாயுமே, அப்போது அதிலிருந்து வெண்தீ பிழம்பாக, சீற்றமாய் பாயுமே, அந்த ஒளியோடு ஒப்பிட்டு, அதைக் கண்டு நாங்கள் மகிழ்வோம்.
மின்னல் ஒளிர்ந்தால், உடனே தொடர்வது ஓசைமிக்க இடிதானே! ஆகவே, பேரதிர்வு கொண்ட இடிகளும் முழங்கட்டும் – இந்த முழக்கம் எத்தகையது? அது அவனது வலம்புரி சங்கு ஓங்கி ஒலிக்கும் பேரொலியாக எங்களுக்குக் கேட்கும். போர் துவங்கு முன்னரே எதிரிகளை வெருண்டோடச் செய்யுமே, அந்த முழக்கத்துக்கு ஒப்பானதான அந்த இடியொலியை நாங்கள் ரசிப்போம்.
நீண்ட, நீண்ட கோடுகள் போல, பலகோடி கணக்கில் மழைச் சாரல் அயர்வுறாது நீடித்துப் பொழியட்டும் – அவற்றை அவனுடைய சார்ங்கம் என்ற வில்லிலிருந்து இடைவிடாது பாயும் அம்புகளாகக் கண்டு நாங்கள் இன்புறுவோம். அந்த மழை உலகோர் அனைவரையும் குளிர்விக்கட்டும்; எங்கும் பசுமையாய் செழுமை சேர்க்கட்டும். முக்கியமாக நாங்கள் மார்கழி நீராட வேண்டும்; அதற்காக எல்லா நீர் நிலைகளும் நிரம்பட்டும்; எங்கள் உள்ளம் உவகையால் துள்ளட்டும்.