

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
எங்கள் பரந்தாமன் பிரமிக்கத்தக்க செயல்களைப் புரிபவன். அதனாலேயே அவன் நம் அனைவருக்கும் தலைவனுமாக விளங்குகிறான். அவன் மதுராபுரியில் அவதரித்தவன், அதனாலேயே அந்த ஊர் பெருமை மிகக் கொண்டது! பொங்கிப் பெருகும் தூய்மையான வெள்ள நீரோட்டம் கொண்ட யமுனை நதி அந்நகரில் பாய்கிறது. தன்னுடைய நீர்ச் செழுமையால் தன் கரைகளில் வளம் கொழிக்கச் செய்யும் அற்புத ஜீவ நதி அது.
அந்த யமுனை நதியின் கரையில் விளையாடி மகிழ்ந்தவன் எங்கள் கண்ணன்; அவன் விளையாடும் அழகு கண்டு, அவ்வப்போது நின்று ரசித்து, பிறகு தன் ஓட்டத்தை அந்த நதியும் தொடர்கிறது. ஞான வெளிச்சமும், மெலிதான வெம்மையும் கொண்ட ஒளி விளக்கு போன்றவன் எங்கள் கண்ணன்; தன் பிறப்பால், ‘இவன் தாய் எந்நோற்றாள் கொல்‘ என்று பெருமை பேசும்படியாக தேவகிக்குப் பெருமையளித்தவன்; இவனுடைய வளர்ப்புத் தாயோ ‘என்ன தவம் செய்தனை!‘ என்று பாரோர் பாராட்டும் புகழ் பெற்றவள். ஆனாலும் அக்கம் பக்கத்தார் முறையிடுகிறார்களே என்று அவனுடைய குறும்பைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் யசோதை அவனை ஓர் உரலில் கயிற்றால் கட்டி வைத்தாள். ஆனால் அதையும் ஒரு விளையாட்டாக, ஆனால் தாய்க்குப் பணியும் நன்னெறியாக ஏற்றுக் கொண்ட மணி வயிறோன் அவன். ஆமாம், அந்த கயிற்றின் தடத்தைக்கூட மிக அழகிய ஆபரணத் தழும்பாகக் கொண்டவன். இந்தக் கண்ணனை சேவிக்க நாங்கள் போகிறோம். அதற்கு முன் தூய்மையாக நீராடி பிறகு அவனைக் காண மணம் வீசும் நறுமலர்களை எடுத்துச் செல்வோம். எங்கள் கண்ணனை மனதில் இருத்தி, அவனுடைய புகழை வாயாரப் பாடினாலேயே போதும் – செய்த பாவங்கள் அனைத்தும் தீ பட்ட தூசுபோல கருகி, உருகி, காணாமல் போய்விடுமே!