

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
இப்படி எம்பெருமானின் புகழை வாய் மணக்கப் பாடி வருகிறோமே, தோழியே, நீ மட்டும் இன்னும் உறக்கத்திலிருந்து மீளவில்லையே? அதோபார், ஐந்தறிவு பறவைகளும் புலரும் பொழுதைக் காணும் ஆவலில் இந்த அதிகாலையிலேயே உறக்கம் நீங்கி எழுந்து சிறகுகளை சிலிர்த்து உதறிக் கொண்டு தம் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனவே! அவற்றின் சுறுசுறுப்பு உனக்கு இல்லையே!
சரி, அதைவிடு, கருட வாகனான எம்பெருமான் கொலுவிருக்கும் கோயிலிலிருந்து வெண்ணிறச் சங்குகள் முழங்கி, ஆதவனை ஆரவாரத்துடன் வரவேற்கும் அந்தப் பேரொலியுமா உன் காதில் விழவில்லை? அப்படி என்ன உறக்கத் திரை உன் காதுகளையும் மூடியிருக்கிறது!
தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கி, மானுடப் பெண்ணாகத் தோற்றம் கொண்டிருந்தாலும், அவளுடைய நோக்கத்தைப் புரிந்து கொண்டானே நம் கண்ணன்; ஆனாலும் அவன் அவளைப் பார்த்த கணத்திலேயே வதம் செய்து விடவில்லையே! அவள் விரும்பியபடியே அவளுடைய முலைப்பாலை அருந்தி, அவளுக்குத் தாய்மைத் தகுதியை அளித்த பேரருளாளன் அல்லவா அவன்! அதற்குப் பிறகுதானே அவளுக்கு மோட்சமும் அருளினான், நம், கருணை வள்ளல்!
ஆனால், சக்கர உருவில் வந்த சகடன் என்ற அரக்கனை, கொஞ்சமும் தயங்காமல், எந்த சலுகையையும் காட்டாமல் அடித்துத் தூள் தூளாக்கினானே அந்த வீரச் சிறுவன்!
அவனை, யோகிகளும், முனிவர்களும் ‘ஹரி, ஹரி‘ என்று அழைத்து நாளெல்லாம் போற்றி மகிழ்கிறார்களே, அந்த இனிய குரலுமா உன்னை எட்டவில்லை? செவியின் சுவையுணரா மாதே, இந்த இன்னொலிகளைக் கேட்டு உடலே சிலிர்க்க உள்ளம் குளிர்வதை விட்டுவிட்டு உறக்கம் பாராட்டுகிறாயே, பேதையே, உனக்கு இது தகுமா?