திருப்பாவை (Thiruppavai): பாடல் – 7
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய், நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய், திறவேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
அட, அறிவிலியே! ஆனைச்சாத்தன் என்ற வலியன் குருவிகள், தங்கள் துணையுடன், உரத்த குரலில் என்ன பேசிக் கொள்கின்றன என்று கவனித்தாயா? அவை நம் கண்ணனின் புகழைப் பேசிப் பரிமாறிக் கொள்கின்றனவே அது உனக்குக் கேட்கவில்லையா? சரி, பக்கத்து வீடுகளில் எல்லாம் தினசரி அதிகாலைப் பணியாக தயிர் கடையப்படுகிறதே, அந்த அரவமும், மணமும்கூட உன் காதையும், நாசியையும் நெருங்கவில்லையா? அந்தப் பெண்கள்தான் எத்தனை சுறுசுறுப்பானவர்கள்!
அதிகாலையில் எழுந்து இவ்வாறு தம் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் அவர்களை நீ முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாமா? இப்படி தயிர்க் கடையும் ஆய்க்குலப் பெண்களின் கூந்தலும் நறுமணம் பரப்புகிறதே, அதுவும் உன் நாசியை எட்டவில்லையா? கண்ணனை மனதில் வரித்து, அந்த சந்தோஷத்தில் மத்துக் கயிற்றைப் பற்றி வேகவேகமாக அவர்கள் இழுக்கிறார்கள். இந்தத் தாழி, கடையப்படும் தயிருக்கு மேல் குன்றாகப் பொங்கி வரும் வெண்ணெயைத் தருகிறதே, அதை கண்ணன் சுவைப்பதைப் பார்க்கும் ஆவலுடன் அதுவும் காத்திருக்கிறதே! முன்னும், பின்னுமாக, சுருக்கமும், விரிவுமாக மத்துக் கயிற்றைப் பெண்கள் இழுக்கிறார்களே, அந்த வேக அசைவில் அந்தப் பெண்கள் கழுத்தில் அணிந்துள்ள அச்சுத் தாலியும் (காசு மாலை), ஆமைத் தாலியும் (ஆமை வடிவிலான தாயத்து) ஒன்றோடொன்று மோதி மங்கல ஒலி எழுப்புகின்றனவே! அதுவுமா உன் காதுகளை எட்டவில்லை?
அதுசரி, இத்தனை நுணுக்கமான சங்கேதங்களை உன்னால் அறிய முடிந்தால், எங்கள் பாடலைக் கேட்டுவிட்டு, நீயும்தான் எழுந்திருப்பாயே! இந்த அழகில், நேற்று, எல்லோருக்கும் தலைமையேற்று நீராட அழைத்துச் செல்வதாக வாக்கு வேறு கொடுத்தாய்! நாங்கள் நாராயணனைப் பாடுவதைக் கேட்டும் தூக்கத்தை போர்வையோடு உதறிப் போட்டு, எழுந்து வரவேண்டாமா நீ?

