

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் பொகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய், எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
பெண்ணே, எங்கள் தோழியே, நீ வெட்கப்படுமளவுக்கு ஒரு செய்தியைச் சொல்லவா? அதோ எருமை மாடுகள்கூட காலை உணவாகிய மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் கூடி நிற்கின்றன; கிழக்கு வெளுத்துவிட்டது என்பது அவற்றுக்கும் தெரிந்திருக்கிறது! அவை அவ்வப்போது ‘மா….‘ என்றழைக்கும் குரல் உன்னை கேலி செய்வதாக நீ உணரவில்லையா? கிராமத்து கன்னிப் பெண்கள் எல்லோரும் நீராட வந்து விட்டார்கள்.
பாவை நோன்பின் தினசரி அதிகாலைக் கடமையாக, ‘உடனே நீராட வேண்டும்; பிறகு உடனே பரந்தாமனை தரிசிக்க வேண்டும்,‘ என்று அவர்கள் அவசரப்படுத்துகிறார்கள். ஆனால் உன் ஒருத்தியை விட்டுவிட்டுப் போவதற்கு எங்களுக்கு மனசில்லை. யாம் பெறும் இன்பம் நீயும் பெற வேண்டுமே என்று உனக்காகவே நாங்கள் காத்திருக்கிறோம். உன் ஒருத்திக்காக அவர்களை நாங்கள் வீணாகத் தாமதப்படுத்துகிறோம். அவர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்பது அவர்களுடைய வேக நடையிலிருந்து தெரிகிறது.
பெண்ணே, உன்னை வேண்டி அழைக்கிறோம். எழுந்து வா. குதிரை வடிவில் வந்தானே கேசி என்ற அரக்கன், அவனுடைய வாயைப் பிளந்து வதம் புரிந்தானே நம் கண்ணன், முஷ்டிகர் முதலான மல்லர்களைப் பந்தாடி வென்றானே நம் கண்ணன், அவனுடைய அந்த வீரதீர பராக்கிரமச் சம்பவங்களை உனக்கு நினைவுபடுத்தினால் நீ உற்சாகமாக எழுவாயா? அல்லது, பயனிலை என்று வக்கிர கற்பனை செய்து கொண்டிருக்கிறாயோ? ‘செயபடு பொருள் என்ன?‘ என்று சுயநலமாக சந்தேகிக்கிறயோ?
ஆனால், தேவாதி தேவனான நம் கிருஷ்ணனை நாம் வணங்கினால், ‘எங்கே, எங்கே,‘ என்று கேட்டபடி நம்மைத் தேடிவந்து அருள் வழங்குவானே! அதை மறந்தாயோ? எழுக, வெளியே வருக, எங்களோடு இணைக.