திருப்பாவை - பாடல் 9: நீலவண்ணக் கண்ணனே! மனதைக் கொள்ளை கொண்ட மாயோனே!

மார்கழி - 9 (24.12.2025)
Thiruppavai song - 9
Thiruppavai song - 9Img Credit: Venkatnagaraj blogspot
Published on

திருப்பாவை (Thiruppavai): பாடல் – 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்

மாமன் மகளே, மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்

ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

நவரத்தினங்களால் பிரகாசிக்கும் மாளிகையில், சுற்றிலும் இதமாக விளக்கெரிய, திரவியங்களின் நறுமணத்தில், பஞ்சு மெத்தையின் மென்மையில் மயங்கி, இழக்க விரும்பாமல் உறக்க சுகத்தை அனுபவிக்கும் எங்கள் மாமன் மகளே, கதவைத் திறப்பாயா?

இத்தனை சொகுசுகளை அனுபவிக்கும் உனக்கு எங்கிருந்துதான் சுறுசுறுப்பு வரப்போகிறதோ என்று எங்களுக்குக் கவலையாக இருக்கிறது. எங்களுடைய சந்தேகமெல்லாம், திடீரென்று உன்னுடைய செவிப்புலன் எப்படி செயலற்றுப் போனது என்பதுதான். பேச்சு எழாதபடி நாவும் மரத்து விட்டதோ? அல்லது ஏதேனும் பில்லி, சூனியம் போன்ற தீய மந்திரங்களால் கட்டுண்டு கிடக்கிறாயோ?

சரி, அவள்தான் இப்படி கிடக்கிறாள்; ஆனால், வீட்டின் உள்ளே இருக்கும் எங்கள் அன்பு மாமியே, உனக்கும் எங்கள் கூக்குரல் கேட்கவில்லையா? ‘உன் தோழிகள் வந்து விட்டார்கள், எழுந்திரு, அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொள்,‘ என்று மகளை உலுக்கி எழுப்ப, அந்தப் பாச மகளின் தூக்கத்தைக் கலைக்க, உனக்கு மனம் வரவில்லையோ? ஒருவேளை, உன் காலைப் பணியில் நீ லயித்து விட்டாயோ? அதனால் உன் மகளையே மறந்து விட்டாயோ?

நாங்கள் எல்லோரும் நீராடி, நீலவண்ணக் கண்ணனைத் தரிசிக்கத் தயாராக இருக்கும்போது, உன் மகள் எங்களுடன் சேர்ந்து கொள்ளாதது உனக்கே அவமானமாக இல்லையா? இப்படி ஒரு பழிச்சொல் உனக்கு ஏற்பட்டு விடாமல் தவிர்க்க, உன் மகளிடம் கண்டிப்பு காட்டக் கூடாதா? அவளை எழுப்பக் கூடாதா? சரி, நாங்கள் அழைப்பதாகவும் சொல்ல வேண்டாம். மாயங்களில் வல்லவன், மாதவ முனிவர்களின் மனதைக் கொள்ளை கொண்டவன், வைகுண்டத்தின் பேரரசன் என்று உனக்குத் தெரிந்திருக்கக் கூடிய நாராயணனின் திருநாமங்களை உன் மகள் காதில் ஓதி, ‘அவன் உனக்காகக் காத்திருக்கிறான்‘, என்று சொல்லிப் பாரேன், அப்போதாவது எழுந்திருக்கிறாளா என்று பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com