

1400ஆண்டுகள் பழமையான சிவத்தலம் கொடியிடை நாயகி சமேத மாசிவாமணீச்வரர் திருக்கோவில். இது சென்னை ஆவடி சாலையில் உள்ளது. சுந்தரர் பாடல் பெற்ற தலம் இது . இத்தலத்தில் வாளால் வெட்டுப்பட்ட சுயம்புலிங்கம் உள்ளது. இங்கு விசேஷமான விஷயம் என்னவென்றால் சுவாமியை நோக்காமல் எதிர்திசையில் நிற்கும் நந்தி உள்ளது. இத்தலம் பற்றி கேட்டாலே முக்தி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
வரலாறு
பழங்காலத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவன் தொண்டைமான் இளந்திரையன். ஒருநாள் இவர் தன் ஆட்சியை விரிவுபடுத்த திக்விஜயம் பயணம் மேற்கொண்டார். அப்போது வடதிசையில் வாணன், ஓணன் என்ற குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர். அவர்கள் பைரவரை உபாசித்து பல்வேறு சக்திகள் பெற்றிருந்தனர். தொண்டைமான் அவர்களிடம் தோல்வியுற்றார். மனமுடைந்து சிவனிடம் தொண்டைமான் தனக்கு வெற்றி அருள் வேண்டினார்.
தொண்டைமானுக்குத் துணையாக சிவன் நந்தியை அனுப்பினார். நந்தியும் அசுரசக்திகளை வென்றார். இந்த நிகழ்வின் காரணமாக ஈசனை நோக்கி அமராமல் நந்தி எதிர்திசை நிற்கிறார். பக்தர்களைக் காக்க தயாராக இருப்பதுபோல் உள்ளார்.
வாளால் வெட்டுப்பட்ட லிங்கம்
தொண்டைமான் தன் வெற்றிக்குப் பிறகு யானை மீது பயணம் சென்றபோது அவரது வாள் தவறி விழுந்து முல்லைத்கொடியில் சிக்கியது. கொடியை விலக்கியபோது அங்கு லிங்கம் இருந்தது கண்டு தொண்டைமான் வியப்புற்றார். வாள்பட்டு லிங்கத்தின் மீது வெட்டுக்காயம் இருந்தது. நடுங்கியபடி ஈசனிடம் மன்னிப்பு கேட்க தான் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதை உணர்த்த வாளை விழச்செய்ததாக அசரீரியாக கூறினார். அன்றிலிருந்து அது மாசிலாமணீஸ்வரர் ஆனது. முல்லைத்கொடி அருகே கண்டுபிடிக்கப் பட்டதால் திருமுல்லைவாயில் ஆனது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அதிசய தரிசனம்
மூலவர் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பில் இருக்கிறார். சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று சந்தனக்காப்பு அகற்றப்பட்டு
நிஜரூபதரிசனம் தருகிறார்
அபிஷேகம் இல்லாத மூலவர்
மூலவர் சுயம்புலிங்கமாகையால் அபிஷேகம் கிடையாது. அதற்குப் பதிலாக பாதாள லிங்கத்திற்கு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.
மற்றொரு அதிசயமான வெள்ளெருக்கு தூண்கள்
வாணன் மற்றும் ஓணனை வென்ற பிறகு அரண்மனையில் இருந்த வெள்ளெருக்கு மரத்தூண்களை இத்தலத்தில் தொண்டைமான் நிறுவினார். இவை இத்தலத்தின் புராண வரலாற்றின் அமைதியான சாட்சிகளாக நிற்கின்றன.
முருகன் உருவாக்கிய தீர்த்த
இத்தலத்தில் உள்ள கல்யாண தீர்த்தம் முருகரால் உருவாக்கமப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது. இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கி குடும்ப நலன் பெருகும்
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி, காசியில் இறந்தால் முக்தி. ஆனால், திருமுல்லைவாயில் பற்றிக் கேட்டாலே முக்தி என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் இது ஸ்ராவண முக்தி தலம் என்று போற்றப்படுகிறது.
தல சிறப்புகள்
வசிஷ்டமுனிவர் இத்தல இறைவனை வழிபட்டு காமதேனுவைப் பெற்றார்.
துர்வாசர் வணங்கிய தலம். சந்திரன் சாபம் நீங்கிய தலம்
குசலவர் பிரம்ம கத்தி தோஷம் நீங்கப் பெற்ற தலம்
இது க்ருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வவனமாகவும், துவாபர யுகத்தில் செண்பக வனமாகவும் கலியுகத்தில் முல்லைவனமாக திகழ்ந்தது.