நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணெயாக மாறும் அதிசய சிவன் கோயில்!

Miraculous Lord Shiva temple turns into butter if ghee is anointed!
Miraculous Lord Shiva temple turns into butter if ghee is anointed!https://en.wikipedia.org

சிவகங்கே மலை உச்சியில் அமைந்திருக்கும் நந்தி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த நந்தியினை தரிசிப்பதற்காகவே சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் இக்கோயிலுக்கு வருகை தந்தவண்ணமுள்ளனர். தீர்த்தங்கள் பல கொண்ட இந்த அற்புதக் கோயில் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

பெங்களூருவிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டோபாஸ்பேட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது சிவகங்கே மலை. இந்த மலையின் 4488 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த அற்புத சிவன் கோயில். இந்த மலையைப் பார்ப்பதற்கு சிவலிங்கம் போலவே அமைந்திருப்பதும், இதன் அருகிலே இருக்கும் நீரூற்றின் பெயர், ‘கங்கா’ என்பதாலும் இம்மலைக்கு சிவகங்கே எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இவ்விடத்தை, ‘தக்ஷிணகாசி’ என்றும் அழைக்கிறார்கள். இதற்கு, ‘தென்னகக் காசி’ என்று பொருள்.

இங்கே பல கோயில்கள் இருக்கின்றன. கங்காதேஸ்வரர் கோயில், ஹோன்னம்மா தேவி கோயில், ஒலக்கல் தீர்த்தம், நந்தி சிலை, பாதாள கங்கை கோயில் போன்றவை உள்ளன. ஹோன்னம்மா தேவி கோயில் மற்றும் காவி கங்காதரி கோயிலும் குகைக்குள்ளே அமைந்துள்ளன. காவி என்றால் குகை என்றும் கங்காதேஸ்வரர் என்றால் கங்கையை தலையிலே சுமந்து கொண்டிருப்பவர் என்றும் பொருள். ஜனவரி மாதத்தில் வரும் சங்கராந்தி திருவிழாவில் கங்காதேஸ்வரர் மற்றும் ஹொன்னம்மா தேவியின் திருமணம் நடைபெறும்.

புராணங்களில் இம்மலையை, ‘காகுட்கிரி’ என்று அழைத்தார்கள். ஹொய்சாலர் ஆட்சிக்காலத்தில் ராணி சாந்தலா ஒரு மகனைப் பெற்றெடுக்க முடியவில்லை என்று இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த மலைக்கோயில் 16ம் நூற்றாண்டில் சிவாப்ப நாயக்கரால் பலப்படுத்தப்பட்டது.

மலை உச்சியில் நந்தி
மலை உச்சியில் நந்திhttps://en.wikipedia.org

இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு நெய் கொண்டு அபிஷேகம் செய்யும்போது, அது வெண்ணெய்யாக மாறுவதாகக் கூறுகிறார்கள். இந்த வெண்ணெய் பல நோய்களுக்கான மருத்துவ குணம் கொண்டது என்று இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். இக்கோயிலில் இருக்கும் கருவறையிலிருந்து காவி கங்காதேஸ்வரர் கோயிலிலுக்கு சுரங்கப்பாதை இருப்பதாகக் கூறப்படுகிறது. குமுட்வதி ஆறு சிவகங்கே மலையிலிருந்துதான் உருவாகிறது என்று கூறப்படுகிறது.

இவ்விடம் கர்நாடகாவில் மலையேற்றம் செய்வதற்கு சிறந்த இடமாக விளங்குகிறது. இம்மலையை ஒவ்வொரு திசையிலிருந்தும் பார்க்கும்போது ஒவ்வொரு ரூபமாகக் காட்சியளிக்குமாம். விநாயகர் போன்று மேற்கு பக்கத்திலும், பாம்பு போன்று வடக்கு பக்கத்திலும், சிவலிங்கம், நந்தி போன்றும் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது.

ஒலக்கல்லு தீர்த்தம்
ஒலக்கல்லு தீர்த்தம்https://en.wikipedia.org

இக்கோயிலில் இருக்கும் இன்னொரு அதிசயம், ஒலக்கல்லு தீர்த்தமாகும். இக்குகையில் பாதாள கங்கை தீர்த்தக் குழியொன்று உள்ளது. அதில் பக்தர்கள் தங்கள் ஒரு கையை மட்டுமே உள்ளே விட்டு பார்க்கக்கூடியதாக உள்ளது. பக்தர்கள் தங்கள் கையை அந்தக் குழியில் விடும்பொழுது சிலரால் தண்ணீரை அள்ள முடிகிறதாம். இன்னும் சிலரால் தண்ணீரை விரல் நுனியில் மட்டுமே தொட முடிகிறதாம். இன்னும் சிலரால் தண்ணீரைத் தொட முடியாத அளவு கீழே சென்று விடுகிறதாம். இதற்குக் காரணம் யார் புண்ணியம் செய்திருக்கிறார்களோ அவர்களாலேயே இந்தத் தண்ணீரை தொட முடியுமாம். பாவம் செய்தவர்களால் தொட முடியாது என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சுகமாக காதை குடைவதால் உண்டாகும் சோதனைகள் தெரியுமா?
Miraculous Lord Shiva temple turns into butter if ghee is anointed!

இங்கே மலைக்கு மேலே பெரிய நந்தி ஒன்று உள்ளது. மக்கள் ஆர்வத்தோடு அதை காண மலையின் உச்சிக்கு ஏறுகின்றனர். எனினும், நந்தியை சுற்றி வருவதற்கு நந்தியின் பின் கம்பிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஒரு அடி தவறினாலும் கீழே பாதாளம். அந்த அளவிற்கு உயரத்தில் நந்தி அமைந்திருந்தும் பக்தர்கள் அதைப் பொருட்படுத்தாமல் நந்தியை தரிசித்துவிட்டே செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, நீங்கள் உங்களது பாவ, புண்ணிய கணக்கை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால், இந்தக் கோயிலுக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமில்லாமல், இவ்விடம் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com