வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில்!

Ponmalainathar Temple
Ponmalainathar TempleImage Credits: NativePlanet

‘சிவன்’ என்றாலே அதிசயம்தான். சிவனையும், சிவன் கோயில்களையும் சுற்றி அதிசயமும், மர்மமும் எப்போதும் நிறைந்தே இருக்கும். அத்தகைய அதிசயம் நிறைந்த சிவன் கோயில் ஒன்றைக் குறித்து இனி காண்போம்.

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் என்னும் திருத்தலத்தில் 500 அடி மலைக்கு மேல் அமைந்துள்ளது பொன்மலைநாதர் திருக்கோயில். இது 1000 வருடங்கள் பழைமையான கோயிலாகும். இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின் 15ம் நூற்றாண்டில் விஜயநகர காலத்தில் விரிவுப்படுத்தப்பட்டது.

‘இருளன்’ என்னும் ஒருவர் காடுகளைத் தோண்டி வேர்களை பறிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம், அவர் காட்டில் மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது அவருடைய கோடரி பூமிக்குள்ளிருந்த சிவலிங்கம் மீது பட்டதால் மயங்கிப் போனார். பிறகு அவரது கனவில் சிவபெருமான் தோன்றி, தான் அந்தக் குழியிலே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதையடுத்து, இருளன் அந்தக் குழியைத் தோண்டி சிவலிங்கத்தை வெளியே எடுத்து மலையிலே வைத்து பூஜிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வழியாகச் சென்ற பல்லவ மன்னன் தான் போரில் வெற்றி பெற்றால், நிச்சயமாக சிவபெருமானுக்கு ஒரு கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டார்.

இக்கோயில் கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. அவற்றில் 2 அடி உயரமுள்ள சுயம்பு லிங்கம் பொன்மலைநாதர் ஆவார். இக்கோயிலில் அதிசய நிகழ்வாகக் கருதப்படுவது என்னவென்றால், மற்ற கோயில்களில் செய்யப்படுவது போல இல்லாமல் இங்கே அபிஷேகம் வெந்நீரால் செய்யப்படுகிறது.

இருளன் என்னும் வேடனால் ஏற்பட்ட காயத்தால் லிங்கத்திலிருந்து இரத்தம் பீறிட்டிருக்கிறது. அதற்காக வெந்நீரைக் கொண்டு அபிஷேகம் செய்ய இரத்தம் நின்றுள்ளது. இதனால் இந்த சிவலிங்கத்திற்கு வெந்நீர் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அந்த அபிஷேக நீரை பருகினால் தீராத நோய்கள் தீரும் என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலில் முதலில் நுழைந்ததும் நம் கண்களுக்குத் தென்படுவது வீரபத்திரர் சிலை, பிறகு பிள்ளையார், அம்பாள் ஆகியோரும் உள்ளனர்.

இக்கோயில் 140 அடி நீளம்,70 அடி அகலம் கொண்டது. மிகவும் பிரபலமான ‘நவநாரிக்குஞ்சரம்’ சிலையும் இக்கோயிலின் உள்ளே அமையப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கே விசாலாட்சி அம்மன், பிள்ளையார், முருகர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சன்னிதிகளும் அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
பசுவிற்கு ஏன் அகத்திக்கீரை கொடுக்கிறார்கள் தெரியுமா?
Ponmalainathar Temple

அருணகிரிநாதர் இக்கோயிலுக்கு  வந்து தனது திருப்புகழில் சிவனை புகழ்ந்து பாடியுள்ளார். அதில் கனககிரி என்றும் இவ்விடத்தை குறிப்பிட்டுள்ளார்.

இக்கோயில் அமைந்துள்ள மலைக்குக் கீழே ஒரு சிறு கோயில் அமைந்துள்ளது. அங்கே திருகாமேஸ்வரர் மற்றும் கோகிலாம்பாள் அருள்பாலிக்கிறார்கள். இக்கோயில் 20 அடி நீளமும் 11 அடி அகலமுமாக உள்ளது. கோயிலின் சுவரில் பன்றிகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் முஸ்லிம் மன்னர்கள் கோயிலை உடைப்பதிலிருந்து பாதுகாக்க இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com