பரக்கலக்கோட்டை சிவன் கோயில்
Parakalakkottai Siva Temple

திங்கட்கிழமை நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படும் அதிசயக் கோயில்!

Published on

ட்டுக்கோட்டை அருகே பரக்கலக்கோட்டைதலத்தில் பிரசித்தி பெற்ற பொது ஆவுடையார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தவம் புரிந்த முனிவர்களுக்கு வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளிய இறைவன் அருள்காட்சி தந்து அவர்களுக்கு பொதுவான தீர்ப்பு வழங்கி பின்பு அந்த மரத்திலேயே சிவபெருமான் ஐக்கியமானார் என்று தல வரலாறு கூறுகிறது. எனவே, இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். தல விருட்சமாக கருதப்படும்  ஆலமரத்தைச் சுற்றி கருவறை சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவருக்கு உட்பட்ட பகுதியே கருவறையாகவும் ஆலமரமே சிவபெருமானாகவும் விளங்குகிறது.

சுவாமியே ஆலமரத்தின் வடிவில் தோன்றி பக்தர்களுக்கு அருட்காட்சி அளிக்கிறார். பக்தர்கள் ஆலமரத்தையே சிவபெருமானாக வழிபட்டு வருகின்றனர். மரமே மூர்த்தியாக விளங்குவது இந்த கோயிலின் சிறப்பாகும். ஆலமரத்தின் அடிப்பகுதியில் சந்தன கலவையை பூசி அதன் மேல் வெள்ளியால் ஆன நெற்றி பட்டம் திருக்கண் மலர்கள் திருநாசி திருவாய் முதலியன பதிக்கப்பட்டு திருவாட்சி பொருத்தப்பட்ட கோலத்தில் இறைவன் எழுந்தருளியிருக்கிறார். எதிரே மரத்தை சார்ந்துள்ள முகப்பு மேடை உள்ளது. அதன் எதிரில் பொன்னார் திருவடிகள் மிளிர்கின்றன.

முகப்பில் அழகான பித்தளை தகட்டினால் செய்யப்பட்ட தோரண வாயிலில் இறைவனின் வடிவங்கள் சித்திர வேலைபாடுகளுடன் விளங்குகின்றன. மரத்தின் முழு வடிவமும் தெரியாதவாறு வெள்ளை திரையிட்டு மறைக்கப்பட்ட நிலையில் திருவாட்சி ஒளி செய்ய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமானின் திருமுகம் லிங்கம் போன்ற வடிவத்தை காட்டி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. நிலைப்படியும் திருக்கதவும் பித்தளை தகடுகளால் அழகுபடுத்தப்பட்டு ஒளி வீசுகின்றன. அதன் எதிரே நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைபாடும் ஆரோக்கிய உணவும்!
பரக்கலக்கோட்டை சிவன் கோயில்

கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி, நெல், துவரை, உளுந்து பயிறு முதலிய தானியங்களையும் தேங்காய், மாங்காய், புளி, மிளகாய், காய்கறிகள் போன்ற பல்வேறு பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோயிலில் பகலில் நடை திறக்காமல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நள்ளிரவு 12 மணிக்கு மட்டும் நடை திறக்கப்பட்டு சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. வருடத்தில் தைப்பொங்கல் அன்று ஒரு நாள் மட்டும் அதிகாலையில் இருந்து மாலை ஏழு மணி வரை நாள் முழுவதும் நடை திறந்திருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com