ஒரு சமயம் துறவி ஒருவர் காட்டில் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டிருந்தார். வழக்கம் போல அப்பகுதியில் விறகு வெட்டி ஒருவன் விறகுகளை வெட்டிக் கொண்டிருந்தான். திரிலோக சஞ்சாரியான நாரதர் அப்பகுதிக்கு விஜயம் செய்தார். வழக்கம் போல ‘நாராயண நாராயண’ என்று பகவான் நாராயணனின் நாமத்தை உச்சரித்தவாறே சென்றார்.
அவருடைய ‘நாராயண நாராயண’ என்ற நாம ஜபம் துறவியையும் விறகு வெட்டியையும் கவனிக்கச் செய்தது. நாரதரை வணங்கிய துறவி, “நாரதப் பெருமானே. எங்கே செல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நாரதர், “வைகுண்டம் சென்று நாராயணனை தரிசிக்கப் போகிறேன்” என்று பதிலுரைத்தார்.
“அப்படியா? பரம சந்தோஷம். தாங்கள் எனக்கு ஒரு உபகாரம் செய்வீர்களா?” என்று கேட்டார் துறவி.
“அதற்குத்தானே நான் இருக்கிறேன். என்னவென்று சொல்லுங்கள். முடிந்தால் செய்கிறேன்” என்று பதிலுரைக்க, துறவி நாரதரிடம் “ஸ்ரீமந் நாராயணனிடம் எனக்கு எப்போது மோட்சம் என்று கேட்டறிந்து சொல்லுகிறீர்களா” என்றார்.
நாரதரும் துறவியிடம், “ஓ அப்படியே செய்கிறேன்” என்றார்.
இதை கவனித்த விறகு வெட்டியும் நாரதரிடம், தனக்கும் எப்போது மோட்சம் கிடைக்கும் என்பதை நாராயணனிடம் கேட்டு வரும்படி பணிவாகக் கேட்டுக் கொண்டான்.
ஸ்ரீமந் நாராயணனை தரிசித்த பின்னர் நாரதர் மீண்டும் அக்காட்டின் வழியே வந்தார். அவரைக் கண்ட துறவியும் விறகு வெட்டியும் ஆவலுடன் நாரதரை நெருங்கி வணங்கி நின்றார்கள். பின்னர் தங்களுக்கு எப்போது மோட்சம் என்பதைப் பற்றி ஸ்ரீமந் நாராயணன் ஏதாவது சொன்னாரா?” என்று கேட்டனர்.
அதற்கு நாரதர், “ஓ சொன்னாரே. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும்போது இருவருக்கும் மோட்சம் கிடைக்கும்” என்று ஸ்ரீமந் நாராயணன் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
இதைக் கேட்ட துறவி நகைப்புடன், “ஊசியின் காதில் ஒட்டகம் எப்படி நுழையும்? நான் இவ்வளவு காலமும் பாடுபட்டுச் செய்த தவம் அனைத்தும் வீணாயிற்றே” என்று புலம்பினார். ஆனால் விறகு வெட்டியோ, “நாரதப் பெருமானே. அந்த நாராயணன் நினைத்தால் ஊசியின் காதில் ஒட்டகமென்ன, யானை கூட நுழையும். அவர் நினைத்தால் எதுவும் நடக்கும்” என்றான்.
இதைக் கேட்ட துறவி, விறகுவெட்டியை கேலி செய்தார். “முட்டாளே, நீண்ட நாள் தவமியற்றிய எனக்கே முக்தி கிடைப்பது சந்தேகம் எனும்போது எதையும் செய்யாத உனக்கு எங்கே முக்தி கிடைக்கப் போகிறது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது என்பது இயலாத காரியம். இதுகூடத் தெரியாத உனக்கு எப்படி மோட்சம் கிடைக்கும்” என்றார்.
அப்போது ஸ்ரீமந் நாராயணனின் குரல் ஒலித்தது. “துறவியே, நீ தவம் செய்து என்ன பயன்? என் மீது உனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், அந்த விறகு வெட்டியோ என்னை முழுமையாக நம்புகிறான். அதனால் அவனுக்கு இப்போதே மோட்சம் அளிக்கிறேன்” என்றார்.
தன்னுடைய அறியாமையும் தவறும் அந்தத் துறவிக்கு இப்போதுதான் புரிந்தது. தனது அறியாமையை எண்ணி மனம் வருந்தினார். காலம் கடந்து வருந்தி என்ன பயன்? இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்தால் எதுவும் நடக்கும் என்பதற்கு இந்த புராணக் கதை ஒரு சான்று. இறைவன் மீது முழு நம்பிக்கை வையுங்கள். உங்களது நியாயமான ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கையும் முழுமை அடையும்.