மாத ஏகாதசிகளும் மகத்தான பலன்களும்!

மாத ஏகாதசிகளும் மகத்தான பலன்களும்!

விரத வழிபாடுகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் மனதுக்கு வலிமையையும் தருகின்றன என்பதாலேயே அனைத்து மாதங்களிலும் விரதங்களுக்கு முக்கியத்துவம் தந்து வருகின்றனர். அந்த வகையில் பெருமாளுக்கு உகந்த ஏகாதசி விரதம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஏகாதசி விரதத்தின் சிறப்பை உணர்த்தும் விதமாக, ‘காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை' என்று நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11ம் நாள் ஏகாதசி திதி அனுசரிக்கப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப்படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும் என்பது விதி. அந்த வகையில் ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி, வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி, ‘முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு வருடத்தில் வரும் ஏகாதசிகளின் பெயர்களையும் அவற்றை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் புராணங்கள் கூறுகின்றன.

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி, ‘காமதா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி. ‘பாப மோகினி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப்பெறும்.

வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி. ‘மோகினி ஏகாதசி’ என்றும், தேய்பிறை ஏகாதசி. ‘வருதித் ஏகாதசி’ என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி. ‘நிர்ஜலா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி. ‘அபார ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி. ‘சயனி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘யோகினி’ என்றும் பெயர்பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது. ‘புத்ரஜா’ என்றும், தேய்பிறை ஏகாதசியானது. ‘காமிகா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.

புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி, ‘பத்மநாபா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘அஜா’ என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி. ‘பாபாங்குசா’ என்றும், தேய்பிறை ஏகாத.சி ‘இந்திரா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி. ‘பிரபோதின’ எனப்படும் இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான, ‘ரமா’ தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கல வாழ்வு கிடைக்கும்.

மார்கழி மாத ஏகாதசி, ‘வைகுண்ட ஏகாதசி’ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி, ‘உத்பத்தி ஏகாதசி’ எனப்படுகிறது.

தை மாத வளர்பிறை ஏகாதசி, ‘புத்ரதா’ என்றும், தேய்பிறை ஏகாதசி, ‘சுபலா’ என்றும் பெயர்பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.

மாசி மாத வளர்பிறை ஏகாதசி, ‘ஜெயா’ என்றும், தேய்பிறை ஏகாதசி, ‘ஷட்திலா’ என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.

பங்குனி தேய்பிறை ஏகாதசி, ‘விஜயா’ எனப்படும். இந்த நாளில் ஏழு வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம். வளர்பிறை ஏகாதசி, ‘ஆமலகி’ எனப்படும். அப்போது விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும். ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி, ‘கமலா ஏகாதசி’ எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com