முனி தாண்டவ நாயகராக அருளும் திருநெல்லையப்பர்!

காந்திமதியம்மை-நெல்லையப்பர்
காந்திமதியம்மை-நெல்லையப்பர்
Published on

திருநெல்வேலி நகரின் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார் காந்திமதியம்மை சமேத திருநெல்லையப்பர். இந்தக் கோயில் சுமார் 1200 வருடங்களுக்கு முன்பு 14 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது. ஆதியில் இந்த இடத்தில் மூங்கில் காடுகள் இருந்ததால், இத்தல பெருமானை வேணுவநேசுவரர் என்று  பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அதனால் இந்த ஊர், ‘வேணுவனம்’ என்று பெயர் பெற்றது. பக்தரின் பிரார்த்தனைக்கு மனமிரங்கி, அவரது நெல் வயல்களை, இறைவன் வேலியிட்டுப் பாதுகாத்ததால் இந்த இடம் நெல்வேலி என்று அழைக்கப்பட்டது. இத்தல இறைவனின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் கொண்டு இந்த ஊர் திருநெல்வேலி என்று பெயர் கொண்டது.

கோயில் முகப்பு
கோயில் முகப்பு

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த 63 நாயன்மார்களுள் ஒருவரான திருஞானசம்பந்தர் இத்தல இறைவனைக் குறித்து தேவாரப் பாடல் பாடியுள்ளார். மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்தக் கோயிலின் வடிவமைப்பை அற்புதம் என்றே சொல்லலாம். இக்கோயில் கோபுரத்தின் உயரம் 850 அடிகள். இத்தல மூலவர் நெல்லையப்பர் என்னும் சிவபெருமான். அம்பிகை காந்திமதி என்னும் பெயருடன் அருளுகிறார் பார்வதி தேவி. அம்மன் விக்ரகம் மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தல அம்மனை, ‘வடிவம்மை’ என்றும் குறிப்பிடுவதுண்டு. சிவனும், சக்தியும் ஒன்று என்பதைக் குறிக்க, பிரதோஷ உத்ஸவ காலத்தில் அம்மனும் பங்கு பெறுவது இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு.

தாமிர மண்டபம்
தாமிர மண்டபம்

இந்தக் கோயிலில் மிகப்பெரிய மண்டபங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபத்தில் உயிருடன் இருப்பது போன்ற சிலைகள் இக்கோயில் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இசைத் தூண்கள் கொண்ட மணி மண்டபத்தில், ஒரே கல்லைக் குடைந்து உருவாக்கப்பட்ட இரண்டு தூண்கள் உள்ளன. அவற்றைத் தட்டும்போது இசையை  வெளிப்படுத்துகின்றன. சிவபெருமான் பூஜைக்கான சோமவார மண்டபம், மூலவர் மற்றும் தாயார் சன்னிதிகளை இணைக்கும் சங்கிலி மண்டபம் உள்ளது. அழகான மரவேலைப்பாடுகள் கொண்ட தாமிர மண்டபம் இறைவனின் முனி தாண்டவத்தைக் காட்சியளிக்கிறது. நடராஜப் பெருமானின் பிரபஞ்ச நடனம் நடைபெற்ற ஐந்து திருத்தலங்களில் நெல்லையப்பர் திருக்கோயிலும் ஒன்று.

தரிசன நேரம்: காலை 5.30 முதல் 12.30 மணி வரை. மாலை 4 முதல் 9 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com