முன்வினை சாபம் போக்கும் வைகாசி விசாக திருநாள்!

திருசெந்தூர் முருகன்
Thiruchendur Murugan

வைகாசி விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக்கடனாக பால் குடங்கள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர். முன்வினை சாபம் போக்கும் இந்நன்னாளில் திருச்செந்தூர் திருத்தலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் புராண நிகழ்வு ஒன்றைக் காண்போம்.

பராசர முனிவரின் ஆறு குழந்தைகள் மிகவும் சுட்டித்தனம் கொண்டவர்கள். ஒரு சமயம் இவர்கள் ஆறு பேரும் குளத்தில் குளித்துக்கொண்டு இருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் குளத்தில் இருந்து வராததால் அங்கு வந்த முனிவர் அவர்களிடம் குளத்தை விட்டு கரையேறும்படி கூறினார். எவ்வளவு சொல்லியும் அவர்கள் குளத்தை விட்டு கரையேறவில்லை. நீண்ட நேரம் குளத்து நீரை அசுத்தம் செய்து விளையாடியதால் அதில் வசித்த பல மீன்கள் இறந்து மிதந்தன.

இதனைக் கண்ட முனிவர் மிகுந்த கோபம் கொண்டு, அவர் ஆறு பேரும் மீன்களாக மாறும்படி சாபம் கொடுத்தார். உடனே அந்த ஆறு பேரும் மீன்களாக மாறினர். அதோடு, தங்களது தவறுக்கு வருந்தி முனிவரிடம் சாப விமோசனம் கேட்டனர். அதைக்கேட்ட முனிவர், ‘அன்னை பார்வதி தேவியின் அருளால் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும்’ என்றார்.

ஒரு சமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி முருகனுக்கு ஞானப்பாலை தங்க கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது, அதிலிருந்து ஒரு துளி மீன்களாக அந்த ஆறு பேர் வசித்த குளத்தில் விழுந்தது. அதனை உண்ட அந்த ஆறு மீன்களும் ஆறு முனிவர்களாக மாறினர். ஆறு பேரும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் வகையில் வழிபட்டபோது, 'நீங்கள் திருச்செந்தூர் சென்று தவம் இருந்தால், அங்கு முருகன் வரும்போது உங்களுக்கு அருள்புரிவார்’ என அசரீரி ஒலித்தது.

இதையும் படியுங்கள்:
நோமோஃபோபியா அதன் விளைவுகள் பற்றி தெரியுமா?
திருசெந்தூர் முருகன்

அதன்படி அந்த ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்தனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம் நிறைந்த பெளர்ணமி நாளில் அந்த ஆறு பேருக்கும் முருகனின் அருள் கிடைத்தது. சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்கி, முருகப்பெருமானின் அருள் பெற்ற இந்த வைகாசி விசாக திருநாள் பத்து நாட்கள் திருவிழாவாக திருச்செந்தூரில் கொண்டாடப்படுகிறது.

இதனால், முன்வினைப் பயனால் துன்பத்தை அனுபவிப்போர், வைகாசி விசாகத் திருநாளில் முருகப் பெருமானை வழிபட, துன்பம் நீங்கி, இன்பம் பெறுவர் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com