கடம்பன் சூடும் கடம்ப மலர்: பழனி மலையின் 'அக்னி நட்சத்திர' அதிசயம்!

kadamba malar
kadamba malar
Updated on

முருகப்பெருமானுக்கு உகந்தது கடம்ப மலர். அவரின் பிரியமான அந்த மலரை. முருகப்பெருமான் மாலையாக அணிந்து காட்சி தருவதால், கடம்பன் என்றே போற்றப்படுகிறார். 27 நட்சத்திரங்களில் சதயம் நட்சத்திரத்திற்கு உகந்தது. கடம்ப மரம் தென் மேற்கு திசைக்கு உரிய மரமாகும். முருகன் கோயில் கட்டுவதற்கு ஏற்ற இடங்களாக "சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும்" என நக்கீரர் தனது திருமுருகாற்றுப் படையில் கூறுகிறார். இதன் பொருள், புதிய மலர்களை கொண்ட கடம்பு மரங்கள் நிறைந்த இடங்களில் முருகன் கோயில்களை அமைக்க வேண்டும் என்பதுதான்.

சங்க இலக்கியங்களில், குறிப்பாகப் பரிபாடல், பெரும்பாணாற்றுப்படையில், முருகனை கடம்ப மரத்தின் கீழ் வீற்றிருக்கும் தேவன் ("கடம்பமர் நெடுவேள்") எனப் போற்றுகின்றனர். கடம்ப மரத்தின் மலர்கள் மற்றும் இலைகளைக் கொண்டு முருகனுக்கு மாலையாகச் சாற்றுவது விசேஷமானது. முருகனுக்குக் கடம்ப மலரைச் சூடி வழிபாடு செய்வது வெற்றி, ஞானம் மற்றும் உடற்பிணிகளை நீக்கும் எனக் கருதப்படுகிறது.

பார்ப்பதற்கு அழகாகவும் நறுமணமும் வீசும் கடம்ப மலர்கள் பெரும்பாலும் கோடைக்காலத்தில் பூக்கும், மே, ஜூன் -ஜூலை மாதங்களில் மட்டுமே பூக்கக்கூடியது. இந்த நேரத்தில் முருகன் கோவில்களில் சிறப்புத் திருவிழாக்கள் நடைபெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலவிருட்சமாக இருப்பது கடம்ப மரம். ஆனால் இங்கு அதிகளவில் இந்த மரங்கள் இல்லை. ஆனால் இன்றும் கடம்ப மரங்கள் அதிகமாக இருக்கும் தமிழக கோயில் நகரம் பழனிதான். இதற்கென சித்திரை மாதத்தில் 'அக்னி நட்சத்திரக் கழிவு 'என்றொரு திருவிழா இங்கு மட்டுமே நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விளக்கேற்றிய வீடு வீண்போகாது! தீப ஒளியின் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்கத்தக்க அறிவியல்!
kadamba malar

சித்திரை மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர நாளில் 14 நாட்களுக்கு இந்த 'அக்னி நட்சத்திர கழிவு விழா ' நடத்தப்படுகிறது‌. சித்திரை மாதத்தின் முதல் 7 நாட்களுடன், வைகாசி மாதம் முதல் 7 நாட்களும் இணைந்து இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

பழனி மலையை சுற்றி வரும் கிரிவலப் பாதையில் இரண்டரை கிமீ தொலைவிற்கு இருபுறமும் கடம்ப மரங்கள் மிகவும் செழிப்பாக வளர்ந்துள்ளன. அக்னி நட்சத்திர கழிவின் 14 நாட்களுக்கு இக் கடம்ப மரங்கள் பூக்கும் அதிசயம் நடக்கிறது. முள்ளு முற்றாக சிறிய பலாவைப்போல பூக்கும் இப்பூக்கள் நல்ல நறுமணத்தை வழங்கும். இந்த அக்னி நட்சத்திர கழிவு நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு கடம்ப மலர்கள் நறுமணத்துடன் பக்தியுணர்வையும் ஏற்படுத்தி தருகின்றன. இந்த திருவிழா நாட்களில் கிரிவலம் செல்லும் பெண்கள் தங்கள் தலையில் ஏராளமான கடம்ப மலர்களை சூடிக்கொள்வார்கள். பலர் இந்த கடம்ப மலர்களை பிரசாதமாக வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த சித்திரை கழிவு விழா மதுரை சித்திரைத் திருவிழாபோல நடைபெறும்.

எழில்மிகு பழநி மலையில் வருடத்துக்குப் பதினைந்து நாள்கள் மட்டுமே கடம்ப மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்தக் கடம்ப மலரின் நறுமணம் பல்வேறு மருத்துவக் குணங்கள் உடையது எனவும், இந்த மலர்களைத் தழுவி வீசும் காற்றினை `சஞ்சீவி காற்று' என்றும் சொல்கின்றனர் மக்கள். பூஜை மற்றும் வாசனைக்காக நன்கு அறியப்பட்ட கடம்ப மலர்கள் சிறந்த மருந்தாகும். ரத்தத்தை சுத்தம் செய்ய, வாய் நாற்றம் போக்க, மூட்டு வலி நீங்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால்தான் நம் முன்னோர்கள் கடம்ப மரங்கள் பூக்கும் காலத்தில் இப்படியோர் திருவிழாவை உருவாக்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சித்தார்த்தர் புத்தராக மாறிய கதை: புத்த பூர்ணிமா உருவான வரலாறு!
kadamba malar

கடம்ப மர மருத்துவ பயன்கள்...

கடம்ப மர இலைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கடம்ப பழ சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து உட்கொள்ள வயிற்று வலி, காய்ச்சல் சரியாகும்.

கடம்ப மர பட்டையை சிறிதளவு எடுத்து பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குளிர் ஜுரத்திற்கு தரலாம். குளிர் ஜுரம் உடனடியாக குறையும். குழந்தைகளுக்கு உண்டாகும் கண் நோய் கடம்பப்பட்டை சாறு, எலுமிச்சை பழச்சாறு சமஅளவு எடுத்து கொடுக்க சரியாகும்.

கடம்ப மர விதைகளை அரைத்து நீரில் கலந்து குடித்து வர எந்த விதமான பூச்சிக் கடியும் சரியாகும். இந்த விதையை உரசி தலையில் பற்று போட தலையில் நீர்க் கோர்த்து இருந்தால் குணமாகும். இதையே கை கால் மூட்டுகளில் வலிகளில் வரும் வலிகளுக்கும் போடலாம்.

கடம்ப மரக் குச்சிகள் கொண்டு பல் துலக்கி வந்தால், பல் சம்பந்தமான பிரச்னைகள் வராது. கடம்ப இலைச் சாற்றை தோலில் ஏற்படும் கரப்பான் நோய்க்கு தொடர்ந்து பூசி வர சரியாகும். குழந்தைகளுக்கு 'உச்சந்தலை' தாழ்ந்து இருந்தால் கடம்ப மரம் பட்டையை இடித்து சாறு எடுத்து தலைக்கு தேய்த்துவர சரியாகும்.

logo
Kalki Online
kalkionline.com