நமது பாவ, புண்ணிய கணக்கு என்றைக்கு எழுதப்படுகிறது? யார் எழுதுகிறார்கள்?

Chitragupta
Chitraguptahttps://www.youtube.com

சித்திரா பௌர்ணமியன்று,  "சித்திரகுப்தன் இன்றைக்கு நம்மோட பாவ, புண்ணிய கணக்கை எழுதி யம தர்மராஜா கிட்ட கொடுக்கிற நாள்.  இன்னிக்கு சேட்டை எதுவும் செய்யாம ஒழுக்கமா  ஜாக்கிரதையா இருங்க. ஒரு ஈ, எறும்பைக் கூட கொல்லக் கூடாது!" என்று வீட்டில்  பெரியோர்கள் எச்சரிப்பதை சின்ன வயதிலேயே நாம் கேட்டிருக்கிறோம்.

மரணத்திற்கு அதிபதி கடவுளான யமதர்மராஜாவுக்கும் ஒரு சமயம் சிக்கல் ஒன்று நேர்ந்தது.  தான் யாருடைய உயிரை பறிக்க வேண்டுமோ அவர்களைப் பற்றிய முழு விவரங்களைப் பற்றி தெளிவான கருத்துகள் இல்லாத தனது தர்மசங்கடத்தை
ஸ்ரீ பிரம்மாவிடம் இவர் முறையிடுகிறார். அச்சமயம் அங்கு தோன்றும்  சிவபெருமான் சித்திரகுப்தனை அப்பணிக்கு அமர்த்துகிறார்.  சித்திரகுப்தரும் வெகு சிரத்தையாக மானிடர்கள் பிறந்த காலம் முதல் இறக்கும் தருணம் வரை அவர்களது வாழ்க்கையில் அவர்கள் செய்த அனைத்து பாவ, புண்ணிய காரியங்களையும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்கிறார். இவ்வாறு இவர் எழுதும் குறிப்புகளை, 'ஆகாஷிக் குறிப்புகள்' என அழைப்பர். இவரது ஒரு கையில் மையினை உடைய ஒரு கிண்ணமும் மறு கையில் சிறகால் ஆன எழுதுகோலும் இருக்கும். சித்திரா பௌர்ணமியன்று இவர் இந்தக் கணக்கை யமதர்மராஜாவிடம் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து கணக்குகளையும் முறையாக எழுதி பராமரித்து வருபவர் சித்திரகுப்தர்தான் என்பது இந்து சமய நம்பிக்கை.  ஒருவருடைய இறப்புக்குப் பிறகு இந்தக் கணக்கு வழக்குகளைப் பொறுத்தே அவரவருக்கு சொர்க்கமோ நரகமோ அமையும் என்பது இந்துக்களின் உறுதியான நம்பிக்கையாகும்.

சித்திரா பௌர்ணமியன்று சித்திரகுப்தனை வழிபட்டால் அவர் நம் பாவ கணக்குகளைக் குறைத்து, புண்ணிய கணக்குகளை அதிகமாக்குவார் என்றும் ஒரு நம்பிக்கை இருப்பதால் சித்திரா பௌர்ணமியன்று பெருமாள், சிவன், அம்பிகை போன்ற தெய்வங்களுக்கு வழிபாடு செய்வதோடு, சித்திரகுப்தனுக்கும் வழிபாடு செய்கிறார்கள்.  சித்திரா பௌர்ணமி சித்திரகுப்தனின் பிறந்த நாள் என்று ஒரு சாராரும், அவருடைய திருமண நாள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
இரவில் குளித்தால் இந்த 7ம் கிடைக்குமா?
Chitragupta

இன்று உப்பில்லாத விரதம் அனுசரித்து சித்திரகுப்தனை வழிபடுவார்கள். இன்று எருமைப் பாலில் செய்த பாயசம் சிறப்பான நைவேத்தியமாகும். "நாங்கள் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் கணக்கில் எடுத்துக்கொள்!" என்று சித்திரகுப்தரிடம் இறைஞ்சி வழிபடுகின்றனர்.

சித்திரகுப்தருக்கு தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் தனிக்கோயில் உள்ளது. அதேபோல, தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்திரபுத்திர நாயனார் என்னும் பெயருடன் கோயில் அமைந்துள்ளது.  இதைத்தவிர, திருவண்ணாமலை அருணாசலேஸ்வார் கோயிலில் இவருக்கு ஒரு தனி சன்னிதி உள்ளது.  திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் நுழைவு வாயில் அருகே உள்ள பிராகாரத்தில் இவர் ஒரு தூணில் காட்சியளிக்கிறார்.

சித்திரா பௌர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலமும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இன்று சித்திரா பௌர்ணமி ஆகும். இன்று கிரிவலம் வருபவர்கள் ஈசனின் அருளோடு, சித்திரகுப்தரின் கருணையையும் பெற்று சிறக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com