

மாதந்தோறும் வளர்பிறையின் ஏழாவது நாள் சப்தமி திதி வருகிறது. அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரும் சப்தமி திதி மிகவும் விசேஷமானது. கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் சப்தமி திதி நந்த சப்தமி என்று அழைக்கப்படுகிறது. நந்த சப்தமி என்பது கோமாதாவை (பசு) வணங்கி வழிபட சிறந்த நாள். பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம்.
அதுமட்டுமின்றி பசுவின் உடலில் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் வாசம் செய்வதாகக் கருதப்படுகிறது. எனவே இந்த நாளில் பசுக்களைப் (கோமாதா) பூஜிப்பது, அதற்கு உணவு கொடுப்பது போன்றவற்றை செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த வழிபாடு சகல பாக்கியங்களையும் அளிக்கும் என்றும் நம்முடைய முன்ஜென்ம சாபம், கர்ம வினைகளை நீக்கும் என்று நம்பப்படுகிறது. பசுவை மூன்று முறை வலம் வந்து கீழே விழுந்து வணங்க வேண்டும்.
இந்த பூஜையின் போது கன்றுடன் சேர்த்து பூஜை செய்வது மிகவும் சிறப்பானது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பசுவுக்கு பூஜை(கோ பூஜை) செய்ய முடியாதவர்கள் வாழைப்பழத்தையாவது வழங்கலாம்.
இந்த ஆண்டு நந்த சப்தமி நவம்பர் 27-ம்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. நவம்பர் 27-ம்தேதி 12:02 am - முதல் நவம்பர் 28-ம்தேதி 12:30 am வரை உள்ளது.
இந்த நேரத்தில் பசுவை வலம் வந்து துதித்தால் பூமியை வலம் வந்த புண்ணியம் கிட்டும். பசுவிற்கு புல்லும், வாழைப்பழமும் அளித்தால் யாகம் செய்த பலன்கள் கிட்டும். சனிக்கிழமைகளில் கோ பூஜை செய்தால் சனிதோஷம் நீங்கும். நவகிரகங்களின் பாதிப்பு நீங்கும். பித்ருதோஷம் நீங்கும்.
நாம் எத்தனை முறை கோபூஜை செய்திருந்தாலும், இந்த நந்த சப்தமி அன்று கோ பூஜை செய்தால் 16 செல்வங்களையும் அனைத்து கடவுள்களும் சேர்ந்து வழங்குவார்கள் என்பது ஐதீகம்.
இந்த நாளில் வீடுகளில் கோ பூஜை செய்வது மிகவும் புண்ணிய பலன்களை தரும். அதுவும் முதல் முறையாக நீங்கள் கோ பூஜையை செய்கிறீர்கள் என்றால் நந்த சப்தமி நாளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.
நந்த சப்தமி அன்று வழிபாடு செய்யும் போது கோமாதாவை மட்டும் வழிபாடு செய்யாமல் மகாலட்சுமி தாயார் படத்தையும் முன்னிலைப்படுத்தி பூஜை செய்வது சிறப்பானது.
அன்றைய தினம் வீடுகளில் பஞ்சகவ்ய விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் விசேஷமாகும். பஞ்சகவ்யம் என்றால் பசு மாட்டிடம் இருந்து கிடைக்கக்கூடிய பால், தயிர், நெய், சாணம், கோ மூத்தரம் ஆகிய அனைத்தையும் கலந்து செய்வது தான் இந்த விளக்கு.
உங்கள் வீடுகளில் அருகில் கோ சாலை இருந்தால் அங்கிருந்து பசுவின் கோமியத்தை எடுத்து வந்து வீட்டில் கோ பூஜை அனைத்தும் முடிந்தவுடன் அந்த கோமியத்தை மாவிலை வைத்து வீடு முழுவதும் தெளிப்பதால் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான துஷ்ட சக்திகளும், தீய சக்திகளும் வெளியேறும் என்று நம்பப்படுகிறது. அனைத்து நாட்களிலுமே கோமியம் தெளிக்கலாம் என்றாலும் நந்த சப்தமி அன்று தெளிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கோவில்களில் இருக்கும் கோசாலைகளில் இருக்கும் பசுக்களுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை போன்றவற்றை உணவாக வழங்கலாம். அதிகளவு கடன் பிரச்சனை இருப்பவர்கள் இந்த நந்த சப்தமி நாளில் வீட்டில் ஒரு கைப்பிடி பச்சரியை ஊறவைத்து, நன்றாக ஊறியதும் அதனுடன் மஞ்சள் வாழைப்பழம், ஏலக்காய், வெல்லம் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து அதை பசுமாட்டிற்கு உணவாக தரும் போது நமக்கு ஏற்பட்டுள்ள அனைத்து விதமான கடன் பிரச்சனைகளும் தீருவதற்கு உண்டான வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அதனால் அதிக கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.
பொதுவாக தொடர்ந்து கோ பூஜை செய்பவர்களுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட கஷ்டங்கள், தோஷங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்குவதற்கு உண்டான வழிபிறக்கும் என்பது ஐதீகம்.
திருமணத்தடை ஏற்படுபவர்கள், எந்த ஒரு காரியம் செய்யும் போதும் தடை ஏற்படுபவர்கள் கோ சாலையில் உள்ள பசுவிற்கு சர்க்கரை பொங்கலை கொடுத்து வந்தால் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் பனிபோல் விலகி விடும்.
பொதுவாக கோபூஜை செய்தால் அனைத்து விதமான தோஷங்கள், தடைகள் விலகுவதாக நம்பிக்கை உண்டு. அதனால் நாளைய தினம் வரும் நந்த சப்தமி நாளில் கோ பூஜை செய்வதன் மூலமாகவும், பசுவிற்கு உணவளிப்பதன் மூலமாகவும் நமது அனைத்து தோஷங்களும் தீருவதற்கு உண்டான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், நாம் செய்த பாவங்கள் அகல, ‘கோ தானம்’ செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.