

இந்திய கலாச்சாரத்தை பொறுத்தவரையில் காளைக்கு எப்போதும் உயரிய மரியாதை வழங்கப்படுகிறது. பிரபஞ்சம் முழுவதும் படைத்து, காத்து , ரட்சிக்கும் தெய்வமாகிய சிவபெருமானின் வாகனமாக இது உள்ளது. சிவபெருமானின் வாகனம் என்பதால், காளைக்கு 'நந்தி தேவர்' என்ற மரியாதைக்குரிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. பொதுவாக காளை என்பது புராணங்களில் அழைக்கப்படுவது இல்லை. ரிஷப வாகனம் அல்லது நந்தி என்று குறிப்பிடப்படுகிறது.
ஆன்மீகத்தின் வடிவமாக இருப்பதால் , நந்தி தேவர் மீது பக்தர்களுக்கு தனிப் பிரியம் உண்டு. பிரதோஷ காலங்களில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் இறைவனை தரிசிப்பது தான், அந்த நேரத்தின் உச்சபட்ச சிறப்பாக இருக்கிறது. பெரியவர்கள் மட்டுமல்ல, சிறுவர்களுக்கும் நந்தியை அதிகம் பிடிக்கிறது, அவர்கள் கோயிலில் உள்ள நந்தியின் ஒரு காதைக் மூடிக் கொண்டு மற்றொரு காதில், தங்களது வேண்டுதல்களை கூறி, அதை கடவுளிடம் பெற்றுத் தர வேண்டும் என்று நண்பனை கேட்பது போல கேட்பார்கள்.
விவசாயத்தில் நந்தி:
விவசாயத்தில் காளை மாடுகள் எப்போதும் முதன்மையான இடத்தில் இருந்தன. பாரம்பரிய விவசாயத்தில் விதைப்பதற்கு முன், ஏர் கலப்பையை காளை மாட்டின் மேல் பூட்டி உழுதனர். வளர்ந்த நாற்றை மற்ற வயல்களுக்கு காளை பூட்டிய மாட்டு வண்டிகளில் அனுப்பினர், அறுவடைக்கு பின்னர் நெல்லையும் , வைக்கோலையும் பிரிக்க மாடு கட்டி நெல்லடித்தனர்.
இறுதியில் நெல்லையும் , வைக்கோலையும் மாட்டு வண்டியில் ஏற்றி அனுப்பினர். இவ்வாறு விவசாயத்தில் காளையின் பங்கு அதிகமாக இருந்ததால் அது விவசாயிகளின் கண்ணிற்கு தெய்வமாக தெரிந்தது. அதனால் , அதை மரியாதைப் படுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் உள்ளிட்ட பல விழாக்களை கொண்டாடினர்.
இந்து மதம் தாண்டி காளையின் பெருமைகள்:
எகிப்து நாட்டு , மெம்ஃபிஸ் நகரில் அபிஸ் என்ற ஒரு புனித காளை வழிபாட்டில் இருந்தது. இது ப்தா மற்றும் ஒசிரிஸ் ஆகிய கடவுளர்களின் உருவமாகக் கருதப்பட்டது. எகிப்தியர்கள் குறிப்பிட்ட சடங்குகளை செய்து சரியான காளைகளைத் தேர்ந்தெடுத்து, வாழ்நாள் முழுவதும் கோயிலில் வைத்து வழிபட்டனர்.
மெசபடோமியா நாட்டின் பாரம்பரிய சுமேரிய மதத்தின் கடவுளான மர்துக் "உடுவின் காளை" என்று அழைக்கப்பட்டார். அங்கு லமாஸ்ஸு என்ற கடவுள், மனித தலையும், இறக்கைகள் கொண்ட காளை உடல் கொண்ட வடிவில் இருந்தார்.
இந்த கடவுள் சிலைகள் அரண்மனைகள் மற்றும் கோயில் வாயில்களில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்தது. சுமேரிய மக்கள் மழைக் கடவுளாக ஹடட் என்ற காளையை வழிபட்டனர்.
கிரேக்க பாரம்பரியத்திலும் காளை தெய்வீக அம்சம் கொண்டதாக கருதப்பட்டது. கிரேக்க கடவுளான ஜீயஸ் புராணத்தில் காளை வடிவம் எடுத்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேல் மக்கள் ஒரு கட்டத்தில் தங்கத்தில் செய்த காளை சிலையை வழிபட்டனர். பின்னர் அவர்கள் யூத மதத்திற்கு மாறிய பின்னரும், ஜெருசலம் ஆலயத்தில் 12 காளைகள் ஒரு வெண்கல பேசினை தாங்குவதை போல அமைத்திருந்தனர். இது கடவுளுக்கு சக்தியை கொடுக்கும் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.
மற்ற கலாச்சாரத்தில் காளை:
சீனாவின் காலண்டரில் ஒரு வருடத்திற்கு 'எருது ஆண்டு' என்று பெயர் சூட்டியுள்ளனர். கொரிய கலாச்சாரத்திலும் எருது ஆண்டு முறை உண்டு. இந்த நாடுகளில், எருது ஆண்டு அமைதியானதாகவும் செழிப்பானதாகவும் கருதப்படுகிறது.
பண்டைய ரஷ்யாவில், எருது ஒரு புனித விலங்காகக் கருதப்பட்டது. வீட்டில் வைக்கப்பட்ட எருதுவின் கொம்புகள் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தருவதாக நம்பப்பட்டது.
பொருளாதாரத்தில் கூட காளை மாடு எழுச்சியையும் லாபத்தையும் காட்டும் அடையாளமாக உள்ளது. அதனால், பங்குச் சந்தை உயரும் போது அதன் அடையாளமாக காளை சின்னம் காட்டப்படுகிறது!